தர்பூசணி தோலில் ஊறுகாய் - பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது?
தர்பூசணித் தோல் ஊறுகாய் புளிப்பு, இனிப்பு கலந்து எல்லா உணவுகளுக்கும் ஏற்ற வகையில் எப்படி பத்தே நமிடத்தில் செய்யலாம் என்பதை கற்றுக்கொள்ளலாம்.

தர்பூசணி தோல் ஊறுகாய்
தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டது. இந்த கோடை காலத்தில் எல்லோரது வீட்டிலும் தர்பூசணி வாங்குவார்கள். அந்த தர்பூசணியின் தசை பகுதியை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி போடுவார்கள்.
ஆனால் இந்த தோல்களில் பல நன்மைகள் இருப்பது யாருக்கும் தெரியாது. அந்த தோலை எப்படி சுவையான ஊறுகாய் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த ஊறுகாய் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையாக இருக்கும். இது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்த ஊறுகாய் செய்ய மிக குறைந்த பொருட்கள் இருந்தாலே போதும்.

தேவையான பொருட்கள்
- தர்பூசணித் தோல் – 150 கிராம் (மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டப்பட்டது)
- ஆப்பிள் சைடர் வினிகர் – 100 மில்லி
- சர்க்கரை – 30 கிராம்
- உப்பு – 10 கிராம்
- கடுகு – 5 கிராம்
செய்முறை
முதலில் ஊறுகாய் செய்ய தர்பூசணித் தோலை நன்கு கழுவி, மெல்லிய, நீளமான துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். அந்த தோலில் கடினமான பச்சை நிறப் பகுதியை நீக்கிவிட்டு, வெள்ளை நிறப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் சைடர் வினிகர், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும். சர்க்கரையும் உப்பும் முழுமையாகக் கரையும் வரை இதை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பின்னர் இதை இறக்கி வைக்க வேண்டும். பின்னர் நறுக்கிய தர்பூசணித் தோல்களை ஒரு சுத்தமான கிண்ணம் அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு, கடுகு சேர்த்துக் கலக்க வேண்டும்.

பின்னர் தயாரிக்கப்பட்ட சூடான வினிகர் கலவையை அவற்றின் மீது ஊற்றவும் தோல்கள் நன்றாக மூழ்க வேண்டும்.
மூடி வைத்து, சில மணிநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஊறுகாய் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |