நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபர்: மாமியார், மருமகளை துடிதுடிக்க கொன்ற அவலம்- குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
தமிழகத்தில் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் மாமியார், மருமகளை கொன்ற வழக்கில் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது மனைவி ராஜகுமாரி (60).இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. கணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது குழந்தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் ராஜகுமாரி, மருமகள் சினேகா, 7 மாத குழந்தை ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல், திருட முயன்ற போது, சினேகா கத்தி கூச்சலிட்டார், இதனால் கோபமடைந்த திருடர்கள் அவரை கொலை செய்தனர்.

தொடர்ந்து மாமியார் ராஜகுமாரியையும் கொன்றுவிட்டு தப்பி ஓடினர், இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தேர்தல் நேரம் என்பதால் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த நபர்களை மடக்கி விசாரணை நடத்தியதில், முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர். தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணையில், முடுக்கூரணியில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த போலீசார், அவனுடைய கூட்டாளிகள் 5 பேரையும் கைது செய்தனர்.
இக்கும்பல் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.