இன்றைய காலத்தில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?
பெற்றோர்கள் குழந்தைகளின் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துகொள்ளவேண்டும். அதிலும், குழந்தைகளை எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்-குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும்.
அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.
இதையெல்லாம் விட பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்றாலும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது.
அதுவும் ஆபத்தை விளைவிக்கும். மேலும், நாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறோமோ, விரும்புகிறோமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும்.
அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணினாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.
முக்கியமாக சொல்லப்போனால் இரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம்.
பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.