உயிரை பறிக்கும் எமனாக மாறும் பேப்பர் கப்! இனி அலட்சியம் வேண்டாம்
இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கு பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. சாதாரண டீக்கடை ஆரம்பித்து பிரமாண்டமான ஓட்டல் வரை இப்படித்தான் டீயும் மற்றும் காபி போன்றவை விநியோகிக்கப்படுகின்றன.
இதுபோன்ற பேப்பர் கப்களில் டீ அருந்துவதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றது. "பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்து, அது ஒழுகிவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுகிறது.
பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகுதான் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது பல பின்விளைவுகளை உண்டாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. அதாவது, டீ, காபி, சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது, இந்த மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
இதனால் தேவையற்ற உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள் என்பது பலரும் அறிந்திராத உண்மையே.
கோப்பையில் சூடான தேநீரை ஊற்றும் போது, மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீருடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது. இளம் வயதிலேயே உடல் பருமன், தொப்பை, அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
குறிப்பாக ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் பல்வேறு உடல் நலக் கோளாறுகளும் இந்த பேப்பர் கப் பயன்பாட்டினால் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக உணவு வகைகளில் இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மை அதிகமாக இருந்தால், அது பிளாஸ்டிக்குடன் சேர்ந்து நச்சுத்தன்மை உடையதாக மாறும்.
அதாவது, பிளாஸ்டிக் பொருளில் சில வேதிப் பொருள்கள் இருக்கின்றன. அதேபோல, உணவுப் பொருள்களிலும் சில வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும்.
முடிந்தவரை பேப்பர் கப்பைத் தவிர்த்துவிட்டு, சில்வர், பித்தளை வகை டம்ளர்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான பழக்கங்களை பழகி கொள்ளுங்கள்.