உயரும் கொரோனா பலி எண்ணிக்கை... விமானம் மூலம் ஆக்ஸிஜனை அனுப்பி வைத்த சிங்கப்பூர் அரசு!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் ஆக்ஸிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், கொரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.
இந்நிலையில், இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானம், ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றது. அங்கிருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு மாலை மேற்கு வங்கத்தின் பனகர் விமானப் படை தளத்தில் தரையிறங்கியது.
சிங்கப்பூர் தவிர ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்திருக்கிறோம் என்று புதுடெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் தூதரகக் கிளைகள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளன.