திருமணமான மறுநாள் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை! கதறியழுத பெண்- நடந்தது என்ன?
தமிழகத்தில் திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் வள்ளுவர்காலனி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மோகன் பாபு (21). கோத்தகிரியை சேர்ந்தவர் கவுசல்யா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இது பற்றி கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம் கூறிய நிலையில் கடந்த 19ம் திகதி மோகன் பாபு கவுசல்யாவை அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். அங்குள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் மோகன்பாபுவின் வீட்டிற்கு வந்தனர். மோகன்பாபு திருமண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் கவுசல்யா மற்றும் மோகன்பாபுவிடம் அவருடைய பெற்றோர் பேசாமல் இருந்துள்ளனர். அதோடு தனிக்குடித்தனம் செல்லுமாறு மோகன்பாபுவிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததோடு பெற்றோர் பேசாததால் மோகன்பாபு மனமுடைந்தார். இதனால் 20 ந் திகதி காலை மோகன்பாபு தனது மனைவி கவுசல்யாவை அழைத்துக்கொண்டு, மேட்டுப்பாளையத்துக்கு சென்று பேருந்து நிலையத்தில் கவுசல்யாவை தனியாக உட்கார வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டு உடைகளை எடுத்து விட்டு வருகிறேன். அதுவரை காத்திருந்து என்று கூறி விட்டு சென்றார்.
அன்று மாலை 4 மணி ஆகியும் மோகன்பாபு வராததால் கவுசல்யா அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா, மோகன்பாபுவின் அண்ணன் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் ஜன்னலை உடைத்து பார்த்தபோது, மோகன் பாபு அங்குள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன்பாபுவின் உடலை மீட்டனர். மேலும் குடும்பத்தார் ஏற்று கொள்ளாததால் மனமுடைந்து இம்முடிவை மோகன்பாபு எடுத்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.