புதியதாக பரவும் 3 வகை கொரோனா தொற்று; 14 நாடுகளில் பரவி விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், தற்போது உருமாறி கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உரு மாறுகிற புதிய கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் பரவி வருகின்றன.
சமீபத்தில் இங்கிலாந்தில் தோன்றிய உரு மாறிய வைரஸ், சீனாவில் முதலில் உருவாகி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ்களை விட வேகமாக பரவுகிற தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே குறிப்பிட்டனர்.
இந்நிலையில், தற்போது உருமாறிய 3 கொரோனா வைரஸ்கள், 14 மேற்கு அரைக்கோள நாடுகளில் பரவியுள்ளதாகவும், அவற்றின் தொற்று மற்றும் தீவிர தன்மை அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்றும் ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், இந்த 3 வைரஸ்களில் ஒன்றுதான், இங்கிலாந்து நாட்டிலும், தென் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்ட வைரஸ் என்று அந்த அமைப்பு கூறுகிறது. மூன்றாவது வகை வைரஸ், பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இது உள்நாட்டில் பரவலாக இருக்கிறது. அங்குள்ள மானுஸ் நகரில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள பலருக்கு அந்த வைரஸ் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் இருந்து வந்த அசல் கொரோனா வைரசை விட இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உரு மாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு கூறுகிறது.