கோபிநாத் உடைத்த உண்மை! இந்த வார நீயா நானா ஏன் நடத்தப்பட்டது தெரியுமா?
இந்த வார நீயா நானா ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து இந்நிகழ்ச்சியின் நெறியாளர் கோபிநாத் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 11, 2022: இந்த நிகழ்ச்சியில் கணவர்கள் தரப்பிலிருந்த பலர் மனைவியின் படிப்பு, அவர்களுடைய தொழில்வாழ்க்கை உள்ளிட்டவை மீது அக்கறை கொண்டு குடும்பத்தில் பங்கெடுத்து கொண்டு அவர்களின் அதிக சம்பளத்தையும், வேலையையும் மதித்து,
சமூகத்தில் யாருடைய எந்த கேள்விக்கும் பேச்சுக்கும் இடம் கொடுக்காமல், அவற்றை காதில் போட்டுக்கொள்ளாமல், இயல்பாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதாவது சுருக்கமாக சொன்னால் மனைவி வேலைக்கு செல்வதை பெருமையாகவும், அதில் தான் எந்த விதத்திலும் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகவில்லை என்கிற கோணத்திலும் யோசிக்கின்றனர்.
சிலர் வேலைக்கு சென்று அதிக சம்பாத்தியம் சம்பாதிக்கும் மனைவியின் சிறு சிறு செயல்களிலும் கூட, அவர்கள் வேலைக்கு செல்வதாலேயே, அதிகம் சம்பாதிப்பதாலேயே நம்மை இப்படி நடத்துகிறார்களோ? பல விஷயத்திலும் சரி, மற்ற முடிவெடுப்பதிலும் சரி அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ? என்று தோன்றுவதாக பேசியிருக்கின்றனர்.
இன்னும் பல,ர் பல நேரங்களில் அப்படி தங்களுக்கு தோன்றுகிறது என்றாலும் அது உண்மை அல்ல.. தங்களுடைய மனைவி பற்றி தங்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
மனைவிமார்களை பொறுத்தவரை வேலைக்கு சென்றாலும் கூட வீட்டு வேலைகளில் எந்த அளவுக்கு செய்து முடித்துவிட்டு, கணவருக்கு தாங்கள் வேலைக்கு செல்வது ஒரு கூடுதல் சுமையை ஏற்படுத்தாத வண்ணமே நடந்துள்ளதாகவும்,
ஆனால் ஒரு சில சமயங்களில் இயல்பாக பேசும் பேச்சு, நடந்து கொள்வது உள்ளிட்டவற்றை வைத்து வேலைக்கு செல்வதால் திமிர், பணம் சம்பாதிப்பதால் அதிகாரம் உள்ளிட்டவை தங்கள் மனைவிகளிடம் இருப்பதாக சில கணவர்கள் கருதிக் கொள்கின்றனர் என்கிற ஆதங்கத்தையும் மனைவிமார்கள் முன் வைத்தனர்.
ஒரு சிலர் தங்கள் படித்ததாலும், வேலைக்கு சென்றதாலும், அதிக பணம் சம்பாதிப்பதாலும் இயல்பாகவே தங்கள் பேச்சிலும், செயல்களிலும், நடவடிக்கைகளிலும் இருந்து உருவாகும் விளைவுகள் - கணவருக்கு எவ்விதம் உணர்வு ரீதியான பாதிப்பை உண்டாக்குகிறது என்பதை அறியாமல், இயல்பாக நடந்து கொள்வதையும் தற்போது உணர முடியுதாக மனம் திறந்து பேசியிருக்கின்றனர்.
இப்படி பல வகையான உணர்வு சங்கமமாக நடந்த இந்த நிகழ்ச்சி ஏன் நடத்தப்பட்டது என்பதை குறித்து கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் முடிவில் கூறுகிறார்.
அதில், “சமூகத்தில் பெண்கள் அதிகம் சம்பாதிப்பதும், வேலைக்கு போவதும் இன்னும் ஐந்து ஆறு வருடங்களில் ... அதைப்பற்றி அவ்வளவு பெரிய பேச்சு பேச வேண்டிய அவசியம் இல்லாத வகையில் மிக இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.
அது அவ்வளவு ஆச்சரியமாகவே இருக்காது. ஆனால் அதன் தொடக்க நிலையில் இதுபற்றிய பார்வைகள், முரண்கள் பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதத்தை நீயா நானா முன்னெடுத்திருக்கிறது.
எப்போதும் ஒரு புதிய சமூக நகர்வு அல்லது மாற்றத்தை குறித்து விவாதிப்பதில் முன்னோடியாக இருக்கக் கூடிய நீயா நானா இப்படியான ஒரு உரையாடலை முதன்மையாக பதிவு செய்ய நினைத்தது. இந்த நோக்கில்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.