ஆட்டு குடலில் மணக்க மணக்க சூப் - வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி வாய்ந்த உணவு
ஆட்டிறைச்சி உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் பல்வேறு மருத்துவ பலன்களும் உள்ளது.
ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால் எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
செரிமானம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும் ஆட்டு குடல் உதவிசெய்யக்கூடியது.
இன்று நாம் ஆட்டுக் குடலில் சூப் செய்வது எப்படி என்று பார்க்க போகின்றோம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுக் குடல் - அரை கிலோ
- சின்ன வெங்காயம் - 150 கிராம்
- தக்காளி - 100 கிராம்
- சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்
- மஞ்சள்த்தூள் - சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- இஞ்சி - சிறிய துண்டு
- பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஆட்டு குடலை நன்றாக கழுவி பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும். பிறகு இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.
மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளியுங்கள்.
பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும். தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 விசில் போட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிது கொத்தமல்லி மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் ஆட்டுக் குடலில் சூப் தயார்.