உங்கள் கண்பார்வை திறனை அதிகரிக்கும் முருங்கைப்பூ ரசம்: 15 நிமிடத்தில் செய்யலாம்
முருங்கை மரத்தின் இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்கு அத்தனை பயன்களை கொடுக்கிறது.
குழந்தையின்மை பிரச்சனைக்கும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முருங்கை பூ பல வழிகளில் நன்மை அளிக்கிறது.
முருங்கைப் பூவைக் கொண்டு சத்தான சுவையான ரசம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் தருகிறது. முருங்கைப் பூ ரசம் உடலுக்கு மிகவும் சத்தானது மாத்திரமல்ல, மேலும் கண்பார்வை, ஞாபக சக்தி அதிகரிப்பு மற்றும் உடலுக்கு பலம் கொடுக்கும் உணவாக இருக்கிறது.
அந்தவகையில் இப்போது முருங்கைப் பூ ரசம் எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு
- தக்காளி - 1
- நெல்லி அளவு - புளி
- பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- பூண்டு - 5 பல்
- சீரகம் - 1 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 2
- கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.மிளகு, சீரகத்தை பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் பொடித்த சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்க்கவும். ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். (ரசத்தை கொதிக்க விடக்கூடாது).
இப்போது சத்தான முருங்கை பூ ரசம் தயார்.