மூன்று பக்கமும் கடல்.. 237 அடி உயர ராஜகோபுரம்!! பக்தர்களை பரவசப்படுத்தும் கோவில்
கர்நாடகத்தின் மிகவும் பிரசித்த பெற்ற முருதேஷ்வரா கோவிலின் ராஜகோபுரம் சுமார் 237 அடிகள் கொண்டது.
உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோவில் உள்ளது. இந்த மலையின் 3 பகுதிகளை அரபிக்கடல் சூழ்ந்திருக்கிறது.
சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் 20 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.
கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம்.
மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது.
கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது.
அத்துடன் இந்த கோவிலின் அருகே பிரமாண்டமான சிவன் சிலையும் இருக்கிறது. 123 அடி உயரம் கொண்ட இந்த சிலை, உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2-வது உயரமான சிவன் சிலை ஆகும்.
கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது.
கோவிலின் வரலாறு
ராவணன் ஒருமுறை கயிலாயத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான். வழியில் அவன் நீராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அப்போது அவன் கொண்டு சென்ற சிவலிங்கத்தை கீழே வைக்க விரும்பாமல், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றான்.
அப்போது அந்தச் சிறுவன், ‘நான் மூன்று முறை உங்களை அழைப்பேன். அதற்குள் வரவில்லை என்றால், கீழே வைத்துவிடுவேன்’ என்று நிபந்தனை விதித்தான். அதை ஏற்றுக்கொண்ட ராவணன் நீராடச் சென்றான்.
அந்தச் சிறுவன் வேண்டுமென்றே வேகமாக மூன்று முறை ராவணனை அழைத்து விட்டு, சிவலிங்கத்தை கீழே வைத்துவிட்டான். சத்தம் கேட்டு ஓடோடி வந்த ராவணன், சிவலிங்கம் கீழே இருப்பதைக் கண்டான். அதை தூக்க முயன்றபோது அவனால் இயலவில்லை.
அவன் பலம் அனைத்தையும் திரட்டியும் சிவலிங்கத்தை அங்கிருந்து தூக்க முடியவில்லை. இதனால் வெகுண்ட ராவணன், அந்தச் சிறுவனை தண்டிக்க முயல, சிறுவன் முருகப்பெருமானாக மாறி காட்சியளித்து மறைந்தார். முருகப்பெருமானால் கீழே வைக்கப்பட்ட சிவலிங்கம் உள்ள தலமே இது என்று கூறப்படுகிறது.
கோவிலின் சிறப்பு
குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி, திருமணம் நடக்க, போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி “சர்வதேவ பூஜை” என்ற சக்திவாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது.
இப்பூஜையின் போது நைவேத்தியமாக “எள், நெய், வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய்பொடி கலந்த “கஜ்ஜாய பிரசாதம்” படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.
எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது.
இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள்.
அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் தினமும் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடை திறந்திருக்கும்.