தற்கொலை செய்த நடிகை சித்ரா வழக்கு.. மத்திய குற்றப்பிரிவுக்கு அதிரடி மாற்றம்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இன்று வரை ஒரு சரியான முடிவு தெரியாமலே இருந்து வருகிறது. மேலும், சித்ராவின் மரணத்தில் கணவர் ஹேமந்த்தையே முன்னிறுத்தி குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப சில சந்தேகங்களுக்கு நமக்கு விடையே கிடைக்காமல் உள்ளது.
இதனிடையே, சித்ரா தரப்பு நண்பர்கள், தோழிகள், உதவியாளர்கள் என பலரும் தினம் தினம் ஒரு தகவல்களை தெரிவித்து வருவதால், இந்த வழக்கின் போக்கு சரியான திசையில்தான் செல்கிறதா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தற்போது சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், 2015-ல் மருத்துவ சீட் வாங்கி தருவதாக 3 பேரிடம் தலா 35 லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஹேம்நாத் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தொடர் விசாரணை நடத்த, சித்ரா வழக்கில் சிறையில் இருந்த ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
தற்போது, சித்ராவின் மரண வழக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சித்ராவின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோர் முதலமைச்சர் தனிப்பிரிவில் சில நாட்களுக்கு முன் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.