45 வயது அம்மா - 21 வயது மகன்: ஒரே மேடையில் பட்டம் பெற்ற நெகிழ்ச்சி தருணம்!
ஒரு தாய் தனது மகனின் பட்டமளிப்பு விழாவைக் கண்டு பெருமைப்படுவது சாதாரண விஷயம். ஆனால், அதே மேடையில், அதே விழாவில், மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றால்? இது எவ்வளவு பெரிய விடயம்.
குஜராத்தைச் சேர்ந்த ஜிகிஷா டெய்லர் (45), தனது மகன் ஆதித்யா கபாடியாவுடன் சேர்ந்து சென்னை ஐஐடி-யின் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்து, ஒரே பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார்."கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை அவர்கள் வாழ்க்கையிலேயே நிரூபித்திருக்கிறார்கள்.

சுவாரஸ்யமான பின்னணி
குஜராத்தின் பரூச் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 16 ஆண்டுகள் எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியராகப் பணியாற்றிய ஜிகிஷா, குடும்பச் சூழ்நிலை காரணமாக 2019-ல் தனது வேலையை விட்டு விலகினார்.
அதே சமயம், 2021-ல் ஆதித்யா சென்னை ஐஐடி-யின் ஆன்லைன் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கொரோனா காலம் என்பதால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடந்தன. "அந்த நேரத்தில் ஐஐடி, எம்ஐடி, ஸ்டான்போர்டு எதிலே சேர்ந்திருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள்தான். எனக்கு டேட்டா சயின்ஸ், ஏஐ மீது அதிக ஆர்வம் இருந்தது," என்று ஆதித்யா கூறுகிறார்.

ஆரம்பத்தில் வேறு ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்த அவர், பின்னர் சென்னை ஐஐடி இந்தப் படிப்பை முழுமையான பட்டப்படிப்பாக அங்கீகரித்ததும், அந்தக் கல்லூரியை விட்டு முழு கவனத்தையும் ஐஐடி படிப்பில் செலுத்தினார்.
மகனைப் பார்த்து மாணவியான அம்மா மகன் படித்துக் கொண்டிருந்த பாடங்களைப் பார்த்த ஜிகிஷாவுக்கும் டேட்டா சயின்ஸ் மீது ஆர்வம் ஏற்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் பின்னணி இருந்ததால் புள்ளியியல், கணினி அமைப்புகள் போன்ற பாடங்களைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது. மேலும் மகனின் ஊக்கத்தால் 2022-ம் ஆண்டு அவரும் அதே படிப்பில் சேர்ந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாணவியாக மாறுவது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. "ஆரம்பத்தில் கணிதமும் புள்ளியியலும் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் சில வாரங்களில் அதற்கு பழகிவிட்டேன்," என தெரிவித்துள்ளார்.
ஜிகிஷாவின் தினசரி அட்டவணையும் படிப்புக்காக மாறியது. அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து காலை 7 மணிக்குள் படிப்பை முடித்துவிட்டு, வீட்டு வேலைகளை கவனித்த பிறகு மீண்டும் படிப்பில் ஈடுபட்டார்.
ஐஐடி நடத்திய நேரலை வகுப்புகள், சந்தேக நிவர்த்தி அமர்வுகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் அவருக்கு பெரும் ஆதரவாக இருந்தன.
முதல்வர் விஜய் சினிமா பயணத்தில் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் இவ்வளவா? தந்தை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
கேலி பேச்சுகளுக்கு பதில்
"இந்த வயதில் ஏன் படிக்கிறாய்? வேலைக்குப் போகப் போகிறாயா?" என்ற கேள்விகளை பலர் எழுப்பினாலும், ஜிகிஷா "புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும்." என எளிமையாக பதில் கொடுத்துள்ளார்.
இவரின் குடும்பத்தின் முழு ஆதரவுடன், படிப்பின் சவால்களை எதிர்கொண்டு அவர் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒரே பாடத்தைப் படித்ததால் தாயும் மகனும் ஒருவருக்கொருவர் உதவியதுடன், நல்ல போட்டியிலும் ஈடுபட்டனர். ஆதித்யா தனது அனுபவத்தின் மூலம் ஆன்லைன் தேர்வுகள், விவா உள்ளிட்டவற்றில் தாய்க்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில், இருவரும் ஒரே நேரத்தில் மேடையேறி பட்டம் பெற்றது எதிர்பாராத சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தக் நிகழ்வு கற்றலுக்கு வயது தடையல்ல; முயற்சி மற்றும் ஆதரவு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை பறைசாற்றியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |