இறந்ததாக புதைக்கப்பட்ட திருடன் உயிருடன் வந்த அதிசயம் - நடந்தது என்ன?
இறந்ததாக புதைக்கப்பட்ட திருடன் ஒருவன் 9 மாதத்திற்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஷதார்பூர் மாவட்டம் பமிதா பகுதியில் கடை வைத்திருப்பவர் சுதிர் அகர்வால். இவரது கடையில், சரக்கு வாகன டிரைவராக நாம்தேவ்(34) நபர் பணியாற்றினார்.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 16ல் சரக்கு வாகனத்தில் இரும்புகம்பிகளை ராஜ்நகரில் உள்ள வாடிக்கையாளரிடம் வழங்கி வரும்படி டிரைவர் சுனில் நாம்தேவுக்கு, உரிமையாளர் சுதிர் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், சுனில் நாம்தேவ் சரக்கு வாகனத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று இரும்பு கம்பியை டெலிவரி செய்தார். பணத்தையும் பெற்று கொண்டார். அதன்பிறகு, அவர் கடைக்கு திரும்பவில்லை. கடை அருகே சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு மாயமானார்.
மேலும், ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் பணத்தோடு சுனில் ஓடிவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். தொடர்ந்து ஜூலை 24ல் ஹொடகர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இது மாயமான சுனில் நாம்தேவ் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும், உடலை மீட்டு அடக்கம் செய்தனர். முன்னதாக அடக்கம் செய்யப்பட்ட உடல் மாயமான சுனில் தானா என்பதை உறுதி செய்வதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், இந்த பரிசோதனையில் சுனிலின் குடும்பத்தினரின் டிஎன்ஏவும், புதைக்கப்பட்ட உடலின் டிஎன்ஏவும் வெவ்வேறானவை என்பது தெரியவந்தது.
சுனில் எங்கு சென்றார் என சந்தேகம் எழுந்த நிலையில், மே 3ல் சுதிர் சுதிர் ஷதார்பூரில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது ஹதா டிகாடா பகுதியில் வைத்து சுனிலை அவர் பார்த்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற சுதீர், பணத்தை வழங்கும்படி கேட்டார். அதற்கு சுனில் மறுப்பு தெரிவித்தார்.
இதனிடையே, இறந்ததாக கருதப்பட்ட சுனில் 9 மாதங்களுக்கு பின் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், எனக்கு பணத்தேவை இருந்தது.
இதனால் பணத்துடன் ஓடினேன். 9 மாதங்களாக பல்வேறு கிராமங்களில் வசித்தேன்.
முன்னதாக நான் வீட்டுக்கும் செல்லாததால் நான் இறந்ததாக குடும்பத்தினர் நினைத்து அடையாளம் தெரியாத உடலை புதைத்துள்ளனர் எனக்கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.