வாடிக்கையாளரின் வைர மோதிரத்தை கழிவறையில் வீசிய கடை ஊழியர்! என்ன நடந்தது?
ஐதராபாத்தில் உள்ள அழகு நிலையத்தில் போலீசுக்கு பயந்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழிவறைக்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதிரத்தை திருடிய கடை ஊழியர்:
ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்கு பெண் ஒருவர் முடி அலங்காரம் செய்வதற்கு வந்திருந்தார். அப்போது, அவர் கையில் போட்டிருந்த மோதிரத்தை கழற்றுமாறு கடை ஊழியர் கூறினார்.
உடனே, அந்த பெண் ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழற்றி கொடுத்துள்ளார். கடை ஊழியர் அதை வாங்கி அங்குள்ள ஒரு பெட்டியில் வைத்துள்ளார்.
பின்பு, முடி அலங்காரம் முடிந்த பிறகு அந்த பெண் மோதிரத்தை திரும்ப வாங்காமல் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, கடை ஊழியர் அந்த வைர மோதிரத்தை எடுத்து தன்னுடைய பர்சில் வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வந்த பெண் வாடிக்கையாளர் பதற்றத்துடன் மோதிரம் குறித்து கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்கள் எங்களுக்கு தெரியாது எனக் கூறினர்.
இதனையடுத்து, பெண் வாடிக்கையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். பின்பு கடை ஊழியர், தான் போலீசில் சிக்கி விடுவோம் என எண்ணி அந்த மோதிரத்தை கழிவறையில் வீசி விட்டு தண்ணீரை ஊற்றியுள்ளார். அப்போது, மோதிரம் குழாய் வழியே சென்று விட்டது.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், கடை ஊழியர் செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. பின்னர், பிளம்பர் உதவியுடன் குழாயில் சிக்கி இருந்த வைர மோதிரம் மீட்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |