2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 வெங்காயம் இருந்தா போதும் - இந்த அசத்தல் சட்னி செய்யலாம்
காலையில் நாம் எல்லோரும் அதிகமாக சாப்பிடுவது இட்லி தோசை தான். இதற்கு எப்போதும் சட்னி செய்வார்கள். அதற்கு தான் இன்றைய பதிவில் ஒரு சூப்பரான உளுத்தம் பருப்பு வெங்காய சட்னி பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 3
- பெரிய வெங்காயம் - 2
- கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- புளி - சிறிய துண்டு
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு
- நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வரமிளகாய் - 1
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் உளுத்தம் பருப்பு சேர்த்து அது பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து நறுக்கிய வெங்காயம், கல் உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை, புளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்துஒரு நல்ல பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, 1 கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளற வேண்டும். அவ்வளவு தான் இட்லி தோசைக்கு சுவையான உளுத்தம் பருப்பு வெங்காய சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
