மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - இந்த கோடை காலத்தில் சிறப்பான ரெசிபி
கோடை காலத்தில் நுங்கு சீசன் தொடங்கி விடும். மக்கள் எல்லோரும் இந்த நுங்கை ருசிப்பதற்கு மட்டுமே சம்மர் வரைக்கும் காத்திருப்பார்கள்.

நுங்கை பலரும் பலவிதத்தில் சாப்பிட்டிருப்பார்கள். சிலர் அதை அப்படியே சாப்பிடுவார்கள். ஆனால் நுங்கை வைத்து சுக்கா செய்யலாம் என்பது யாருக்கெல்லாம் தெரியும்.
ஆம் நுங்கை வைத்து சுக்கா செய்யலாம். இது பிரபல சமையக்காரர் மாதம்பட்டி ரங்கராஜ் செய்து காட்டியுள்ளார். இது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு
மல்லி - 1 ஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
பட்டை - 1 துண்டு
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2

தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
அரைத்த மசாலா - 3 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
நுங்கு - 5 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 1/2 ஸ்பூன் (இடித்தது)

செய்முறை
நுங்கு சுக்கா செய்ய முதலில் மிக்சியில் மல்லி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சீரகம், சோம்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கருக்கி விட கூடாது.

பின்னர் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த மசாலாவில் இருந்து 3 ஸ்பூன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 1 நிமிடம் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய நுங்கை சேர்த்து, மசாலா நுங்குடன் ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும். அவ்வளவு தான் அடுப்பை விட்டு இறக்கி கேடை காலத்தில் நுங்கு சுக்காவை ருசிக்கலாம்.