திடீரென காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்; ஆத்திரமடைந்த காதலன் செய்த கொடூர சம்பவம்!
காதலிக்கு வேறொருவருடன் நிச்சயமானதால் காதலியின் வீடு புகுந்து தீ வைத்து அவரை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை அனந்த நாயகி நகர் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கட்டம்மா. இவரது மகள் ரஜிதா, வெங்கட்டம்மாவின், கணவர் சென்னை மாநாகராட்சியில் வேலை பார்த்தபோது மரணமடைந்து விட்டார்.
இந்நிலையில் வெங்கட்டம்மாவின் மகள் ரஜிதா அதே பகுதியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ் ( 31) என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ரஜிதாவுக்கு, சதீஷ் தாலி கட்டி கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தந்தை இறந்து போனதால் அவரது வேலை மகள் ரஜிதாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது.
ரஜிதா, தண்டயார்பேட்டையிலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும், அரசு வேலை கிடைத்ததும் ரஜிதா சதீஷை சந்திக்க மறுத்து அவரை பார்க்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதற்கிடையே மாநகராட்சியில் பணிபுரியும் மைலாப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ரஜிதாவுக்கு கடந்த ஜனவரி 17ம் தேதி திருமண நிச்சயம் ஆனது.
இந்த விஷயத்தை அறிந்த சதீஷ் கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். தன்னை காதலித்து விட்டு வேறொருரை திருமணம் செய்வது தொடர்பாக ரஜிதாவுடன் அவர் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலி ரஜிதா மீது ஆத்திரத்தில் இருந்த சதீஷ் அதிகாலை 3 மணியளவில் ரஜிதாவின் வீட்டின் மேல் இருந்த ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் குதித்துள்ளார். அதன் பின்னர், ரஜிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
அதைத்தடுக்க வந்த அவரது தாய் வெங்கட்டம்மா மீதும் தீ வைக்க வீடே பற்றி எரிந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் வீட்டுக்குள்ளேயே 3 பேரும் உடல் கருகி பலியானார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கும், ஆர்கே நகர் போலீசுக்கும் தகவல் அளித்தனர்.
வீட்டில் தாய், மகள் மட்டுமே வசித்த நிலையில் மூன்றாவதாக உடல் கருகி கிடந்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்திய போதுதான் அது சதீஷ் என்பது தெரிய வந்தது.
போலீசார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.