கழுத்து வலியை போக்கும் ஆசனம்... பலரும் அறியாத அற்புத காட்சி
கழுத்து வலியை போக்க குரு.கிருஷ்ண பாலாஜியின் நேர்காணல் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
கர்ண புஷ்ட ஜானு பத்மாசனம்...
மனிதனின் உடலில் இடதுபுற உறுப்புக்கள், வலது புற உறுப்புகள் இருக்கும். இவை இரண்டுமே மிக முக்கியமானது. வலது புற உறுப்புகளும் நன்றாக இயங்க வேண்டும், இடதுபுற உறுப்புக்களும் நன்றாக இயங்க வேண்டும். உடலில் கழிவுகள் எந்த பகுதிகளிலும் தங்கக்கூடாது. உடல் பருமன் ஆகக்கூடாது. நிறைய பேருக்கு தொப்பையும், இடுப்பு தசைகளும் அதிகமாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் மூச்சு விடுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். இந்த ஆசனத்தை செய்யும்போது இடது புற உறுப்புகளுக்கு நல்ல புராண ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு இடுப்பு தசைகள் அதிகமாக இருக்கும்போது அவர்களுக்கு இடுப்பு வலி, இடுப்பு தசை இறுக்கம் ஏற்படும். அந்த மாதிரியான நிலைகள் வராமல் இந்த ஆசனம் தடுக்கக்கூடியது. நம்ம உடம்பில் நுரையீரல் நன்றாக இயங்க வேண்டும்.
இப்போ இருக்கிற காலத்தில் நமக்கு காய்ச்சல் வரக்கூடாது என்றால் இந்த பயிற்சியை அழகாக தினமும் காலை, மாலை உங்களுக்கு குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். நிச்சயமாக நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். வலது பக்கம், இடது பக்கம் நுரையீரல் நன்றாக இயங்கும். யாருடைய உடம்பு நல்ல காற்றை உள்வாங்கி அசுத்த காற்று வெளியிடுகிறதோ அவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் வராது. நிறைய பேருக்கு கழுத்து வலி, கழுத்து தசைப்பிடிப்பு, தோள் பட்டை வலி இதெல்லாம் நிறைய பேருக்கு இருக்கும். இந்த ஆசனத்தை செய்யும்போது கழுத்து வலி நீக்கப்படுகிறது. கழுத்து தசை இறுக்கம் நீக்கப்படுகிறது.
இதோடு சேர்த்து உணவிலும் ஒரு ஒழுக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். பசிக்கும்போது பசி அறிந்து சாப்பிட வேண்டும். இரவு உணவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அரை சாப்பாடு, கால் தண்ணீர், மூச்சு விடுவதற்கு இடைவெளி விட்டுவிட வேண்டும்.
முடிந்த அளவு இரவு பால் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். காலையில் நீங்கள் பால் சாப்பிடும்போது சூரியன் வெளிச்சம் காரணமாக அது ஜீரணமாகிவிடும். இரவு நாம் பால் சாப்பிடும்போது அஜீரணமாகிவிடும். இரவு சுக்கு காபி எடுத்துக் கொள்ளுங்கள்.
சுக்கு அதில் கொஞ்சம் கருப்பட்டி போட்டு நன்று கொதிக்கவைத்து குடித்து விடுங்கள். இந்த ஆசனத்தை காலை 4 மணியிலிருந்து 7 மணிக்குள், மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள், சாப்பிடுவதற்கு முன்பாக தரையில் ஒரு மேட்டை விரித்து நிதானமாக சுகாசனம் செய்யுங்கள். அடுத்து பத்மாசனத்தில் பயிற்சி செய்யுங்கள். இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள் உங்கள் குருக்களிடம் ஆலோசனை கேட்டு பயிற்சி செய்யுங்கள்.
சுகாசன பயிற்சி
நேராக அமர்ந்து, கண்களை மூடி இயல்பாக நடக்கக்கூடிய மூச்சில் ஒரு 5 நிமிடம் கவனம் செலுத்துங்கள். பொறுமையாக கண்களை திறந்து கொள்ளுங்கள். கைகளை பின்னாடி பொறுமையாக கட்டிக் கொள்ளுங்கள்.
மூச்சுவிட்டுக்கொண்டே இடது பக்கம் கீழே வர வேண்டும். 1லிருந்து 10 எண்களை எண்ணிவிட்டு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே நேராக வந்து விடுங்கள். ஒரு இரண்டு நிமிடம் நார்மலான மூச்சை விடுங்கள்.
மீண்டும் அடுத்த பக்கம் மூச்சை வெளிவிட்டுக்கொண்டே கீழே வாங்க. 1லிருந்து 10 எண்களை எண்ணிவிட்டு மீண்டும் மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே நேராக வந்து விடுங்கள்.
அர்த்தபத்மாசனம்
முதலில் கால்களை பொறுமையாக நீட்டிக்கொள்ளுங்கள். ஒரு காலை மடக்கி தன் இடது தொடை மேல் வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு காலை உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். இது அர்த்தபத்மாசன நிலை. மீண்டும் கைகளை பின்னால் கட்டிக்கொள்ளுங்கள்.
மீண்டும் சாதாரண மூச்சை விட்டுக்கொண்டு கீழே இறங்கி வாருங்கள். 1 லிருந்து 10 எண்களை எண்ணிவிட்டு, மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே நேராக வந்து விடுங்கள். 2 வினாடி நார்மலாக மூச்சை விட்டுவிடுங்கள். அடுத்த பக்கம் மெதுவாக மூச்சை விடுக்கொண்டே கீழே இறங்கி வாருங்கள். மீண்டும் 1 லிருந்து 10 எண்களை எண்ணிவிட்டு, மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே நேராக வந்து விடுங்கள்.
பத்மாசனம்
பொறுமையாக கால்களை நீட்டிக்கொள்ளுங்கள். இரு கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக மடித்து வைத்துக் கொண்டு, கைகளை பின்னால் கட்டிக் கொள்ளுங்கள். மூச்சை வெளியே விட்டுக்கொண்டு ஒரு பக்கமாக கீழே இறங்கி வாருங்கள். அங்கு சாதாரண மூச்சில் இருங்கள். பின்னர் 1லிருந்து 10 எண்களை எண்ணிவிட்டு மூச்சை இழுத்துக்கொண்டே நேராக வந்து விடுங்கள்.
இந்த ஆசனத்தை 21 நாட்கள் செய்தாலே உங்களுக்கு அந்த சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும். நிறையே பேர்களுக்கு பசி எடுக்காது. அவர்கள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யும்போது சிறு குடல், பெரு குடல் நன்றாக இயங்கும். நல்ல பசி எடுக்கும்.
ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கும். காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாக இருக்கலாம். பொதுவாகவே யோகாசனத்தை அதிகாலையில் செய்யும்போது பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.