கவின் - நயன்தாரா கெமிஸ்ட்ரியில் கலக்கும் ‘ஹாய்’ - படத்தின் முழு விமர்சனம்!
லலித் குமார், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஹாய் படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ளார்.
டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்துநயன்தாரா நடிப்பில் ஹாய் படம் ஆகஸ்ட் 28ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. Hi திரைப்படத்தின் திரை விமர்சனம் இதோ!
Hi திரைப்படம் எப்படி உள்ளது?
இந்த படமும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போல வயது வித்தியாச காதல் படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியெல்லாம் இல்லை என்பது படத்தை பார்த்தவுடனே தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு நயன்தாராவும் கவினும் கெமிஸ்ட்ரியை செமையாக மேட்ச் செய்து நடித்துள்ளனர்.
ஸ்டார் படத்திற்கு பிறகு கவின் நடித்த கிஸ் மற்றும் மாஸ்க் படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நயன்தாராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் டைட்டிலை போலவே ஃபீல் குட்டாக இருக்கின்றது.

ஹாய் கதைகளம்
காதலிக்கவும் திருமணம் செய்யவும் பெண்களே கிடைக்கவில்லை என்பதால் சூசைட் செய்யும் அளவுக்கு செல்லும் மயில்சாமி கேரக்டரில் கவின் பக்காவாக பொருந்தி நடித்துள்ளார்.
கடன் பிரச்னையால் பிடிக்காத அதுவும் பெண்களை அடித்து துன்புறுத்தும் நபரை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என ஊரை விட்டு ஓடி வரும் தேவயானியாக நயன்தாரா அழகில் ரசகுல்லாவாகவே அசத்துகிறார்.
தேவயானியிடம் தனது காதலை சொல்ல வர, அவர் ஒரு மோசமான விஷயத்தை சொல்லி ஆண்களே இப்படித்தான் பார்த்த உடனே ஒரு பெண்ணிடம் லவ் சொல்றாங்க என நெத்தியடி பதில் சொல்ல, அப்புறம் கையில் வைத்திருந்த ரோஜாப்பூவை தூக்கிப் போட்டு விட்டு, அவரிடம் தோழனாகவே பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் தேவயானியை காப்பாற்ற, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், அவர் வயிற்றில் என் குழந்தை வளருது என சொல்லி தேவயானியுடன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றும் மயில்சாமி கடைசி வரை தனது காதலை தேவயானியிடம் சொன்னாரா? திருமணத்தை நிறுத்த போட்ட டிராமாக்கள் என்ன ஆனது? என்பதை பார்க்கள் ஆவலாக உள்ள வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது.
கோவை தமிழில் உருளை கண்ணாடியை அணிந்துக் கொண்டு முதல் பாதி முழுவதும் கவின் பேசுவதும் நடிப்பதும் பக்காவாக பொருந்தி போய் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.
ட்ரூத் ஆர் டேர் சவாலுக்காக நயன்தாராவும் கவினும் ரெட் லைட் ஏரியாவுக்குச் செல்லும் இடமெல்லாம் காமெடி செமையாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. முதல் பாதி முழுக்க இருவருக்கும் இடையேயான நட்பு எந்த நொடியில் காதலாக மாறுகிறது என்கிற தருணம் அருமை.
2வது பாதியில் படம் அப்படியே தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் ஸ்டைலில் சேஞ்ச் ஓவர் ஆகிறது. இந்த படத்திலும் பாக்யராஜ் ஹீரோவோட அப்பாவாக நடித்து செம ஸ்கோர் செய்கிறார்.
"என்ன மட்டும் இல்லை, எனக்கு ஒன்னுன்னா எங்க அப்பா எல்லாரையும் அடிப்பார்" என வசனம் பேசிவிட்டு பாக்யராஜ் சாரை ஸ்கோர் செய்ய விட்ட இடம் சூப்பராக அமைந்துள்ளது.
பெயர் மட்டுமில்லை, ஆளே பரிசுத்தம் என தப்பாக நினைக்கும் நயன்தாராவுக்கு ஃபெப்சி விஜயன் சொல்லும் இடமெல்லாம் விசில் பறபக்கிறது.
சண்முகி டாக்டராக வந்து விட்டு விடிவி சொல்லும் சந்திரமுகி காமெடி, துருவ் விக்ரம் குரலில் கிளைமேக்ஸுக்கு முன்னதாக வரும் "குடிகார நெஞ்சு" பாடல் என ஏகப்பட்ட விஷயங்கள் படத்தை ஜாலியாகவும் ஃபீல் குட்டாகவும் கொண்டு செல்கிறது.
கவின், நயன்தாரா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு என நடிகர்களின் தேர்வே இந்த படத்தை கச்சிதமாக காப்பாற்றியுள்ளது. கணபதி இல்லை தளபதி, உயிருள்ளவரை உஷா என ஏகப்பட்ட சினிமா ரெஃபரன்ஸுகளும் கதைக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன.
ஜென் மார்ட்டின் இசையில் ரசகுல்லா பாடலும் குடிகார நெஞ்சு பாடலும் இமிடியேட் ஹிட்டாக மாறிவிடுகிறது. பின்னணி இசை காமெடி காட்சிகளில் சிரிக்கவும், எமோஷனல் காட்சியில் ஃபீல் பண்ணவும் வைத்துள்ள விதம் சிறப்பு.
ரஜினி, கமல் எல்லாம் தேவையில்லை மயில்சாமி போதும் என சொல்லும் இடம் ஒருத்தன் உண்மையாக அன்பு செலுத்தினாலே பெண்களுக்கு பிடிக்கும் என்கிற விஷயத்தை கடத்த இயக்குநர் பண்ண விஷயம் பாராட்டுக்குரியது.

மைனஸ் என்ன?
முதல் பாதியில் சில இடங்களில் இடம் பெற்ற டிராமாக்கள் பெரிதாக ஒட்டவில்லை என்றாலும், ஃபிரெஷ்ஷாக இருந்தது. படத்தின் பலமே 2வது பாதி தான்.
ஆனால், முதல் பாதியில் வந்த மயில்சாமி 2வது பாதியில் பல இடங்களில் கவினாகவே வந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுவதும் நயன்தாரா வெள்ளந்தியாக இருக்க பிரபு தான் காரணம் என்று சிம்பிளாக கடந்து செல்வது பெரிதாக கனெக்ட் ஆகவில்லை.கிளைமேக்ஸ் காட்சியில் சுஹாசினி வரும் இடங்களும் இன்னமும் பெட்டராக ஸ்டேஜிங் செய்திருக்கலாம்.
மொத்த்த்தில் இந்த வாரம் வெளியான டாக்ஸிக் படத்தில் கங்காவா இந்த நயன்தாரா என வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு செம அழகாக நடித்துள்ளார்.
யாரடி நீ மோகினி படத்தில் அவருக்கு ரெட் சாரி தான் அழகா சூட் ஆகும் என தனுஷ் சொல்வது போல இங்கே ஒயிட் சுடிதார் குறித்து கவின் சொல்லும் இடமெல்லாம் க்யூட்டாக உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு ஃபீல் குட் படமாகவே இந்த ஹாய் படம் அழகாக உருவாகியுள்ளது. தாராளமாக தியேட்டரில் சென்று பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |