எச்சில் ஊறும் சுவையுடன் கருவாட்டு பிரியாணி! வீட்டிலேயே செய்வது எப்படி?
பிரியாணி இன்று பலருக்கு மிகவும் பிடித்த உணவாகும்.
அசைவ மற்றும் வைவ விரும்பிகள் ருசிக்க கூடிய வகையில் பிரியாணியில் பல வகை உள்ளது.
இன்று நாம் சற்று வித்தியாசமாக கருவாட்டில் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவுகளில் கருவாடும் ஒன்று. கருவாட்டு பிரியாணியை அச்சமின்றி அனைவரும் ருசிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி - அரை கிலோ
- கருவாடு - அரை கிலோ
- வெங்காயம் - அரை கிலோ
- பழுத்த தக்காளி - அரை கிலோ
- பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
- சில்லி - இரண்டு தேக்கரண்டி
- தயிர் - ஒரு கோப்பை
- கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- புதினா - ஒரு கொத்து
- பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
- பிரியாணி இலை - இரண்டு
- உப்பு தூள் - தேவையான அளவு
- எண்ணெய் - 200 மில்லி
- நெய் - 50 மில்லி
- எலுமிச்சை - அரை பழம்
செய்முறை
அரிசியை முதலில் நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு கருவாட்டை நன்றாக கழுவி பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பிரியாணி செய்ய தக்காளி, வெங்காயத்தை வெட்டிக்கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளியுங்கள்.
அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.
அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும்.
அடுத்து அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஏற்ற வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விட்டால் கருவாட்டு பிரியாணி ரெடி. மணக்க மணக்க குடும்பத்துடன் ருசியுங்கள்.
முக்கிய குறிப்பு
பிரியாணியை அதிகமாக சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
எந்த உணவாக இருந்தாலும் நாம் சாப்பிடும் அளவு என்பது முக்கியம். சுவையாக உள்ளது என்பதற்காக வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம்.
அது மட்டும் இல்லை பிரியாணியில் நல்ல கொழுப்புக்களை போல சில தீய கொழுப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.
பிரியாணி சாப்பிட்டவுடன் மூலிகை பாகங்கள் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தினை கொடுக்கும். இது பிரியாணியில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் செய்கின்றது.
எனவே பிரியாணி சமைக்க அளவு எவ்வளவு முக்கியமோ அதே போல சாப்பிடுவதிலும் அளவு அவசியம் என்பதை மனதில் வைத்தால் சிறப்பு.