பிக்பாஸில் ஆணாதிக்கம்... இது ஒரு தொகுப்பாளருக்கு அழகா? விஜய் சேதுபதியை விளாசிய ஜேம்ஸ் வசந்தன்
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிக் பாஸ் 8ம் சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 7 சீசன்களாக தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் நினழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி களமிறங்கிளார்.
விஜய் சேதுபதி ஆண் போட்டியாளர்களை கண்டுகொள்ளாமல் பெண்களை மட்டும் கடுமையாக விமர்சிப்பதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்ச்சித்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போது விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசும் விதத்தை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு கமல் ஹாசன் இருந்திருக்கலாம் என பெரும்பாலானவர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிக் பாஸ் விஜய் சேதுபதியை தாக்கி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு
இந்நிகழ்ச்சியின் முன்னாள் நடத்துநர் கமல்ஹாசன்; இப்போது விஜய் சேதுபதி. இருவரும் அவரவர் பாணியில் நடத்துவதும், அதற்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுவதும் இயல்புதானே.
கமல்ஹாசன் மேலிருந்தக் குற்றச்சாட்டு "எல்லாரிடமும் ரொம்பவும் மென்மையாக, கொஞ்சம்கூடக் கடிந்துகொள்ளாமல், கண்டிப்பு இல்லாமல் இருக்கிறார்" என்பதுதான்.
இதையெல்லாம் கேட்டறிந்துதானே வந்திருப்பார் VJS. தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் இயல்பான, அதிரடியான பாணியைக் கண்டு வியந்தவரும், பாராட்டியவரும் இன்று வெறுப்படையும் நிலைக்குச் சென்றிருக்கின்றனர்.
போட்டியாளர்களிடம் உரையாடும்போதும், பிரச்சனைகளை ஆராய்ந்தபோதும் கமல்ஹாசனிடம் பண்பு இருந்தது, முதிர்ச்சி இருந்தது, ஞானம் இருந்தது, மதிநுட்பம் இருந்தது, சமூகப் பொறுப்பு இருந்தது. ஒவ்வொருவரையும் ஆளுமைகளாகவே பார்த்தார்; கையாண்டார்.
இது ஆணாதிக்க உலகம்
அவர்களை நேரடியாகக் குற்றப்படுத்தியதில்லை, சொற்களால் காயப்படுத்தியதில்லை, மட்டுப்படுத்தியதில்லை, தனிப்பட்ட விதத்தில் தாக்கியதில்லை, அவர்கள் உணர்வுகளைச் சீண்டியதில்லை, தனக்கிருந்த உயர்பொறுப்பைக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தியதில்லை.
இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேனென்று புரிந்துகொள்பவர் புரிந்துகொள்ளட்டும். இது ஆணாதிக்க உலகம். நம் தமிழ்ச்சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
அதன் நிரூபணத்தை இந்த வீட்டில் 55 நாட்களாகக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். தன்னைக் கேள்வி கேட்கிற, விமர்சிக்கிறப் பெண்களை எப்படி ஆண்களெல்லாம் ஒன்றுசேர்ந்து கடுமையாக, கொடுமையாகத் தாக்கி நிலைகுலையச் செய்து மகிழ்கிறார்களோ, அதையே நிகழ்ச்சி நடத்துநரும் நேற்று செய்தது நம்மை அச்சப்பட வைத்திருக்கிறது.
இவர் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறார் என்பது ஒருபுறம். அதனால் பொதுநலக் கேடு ஒன்றுமில்லை. அது அவர் இயல்பு. நமக்குப் பிரச்சனையில்லை. ஆனால், அத்தனைக் குற்றங்கள் செய்த ஆண்களை விசாரிக்காமல், ஏற்கனவே அவர்களால் உணர்வுபங்கம் செய்யப்பட்டப் பெண்ணை இவரும் சேர்ந்து குற்றப்படுத்தி, சிறுமைப்படுத்தி, தான் செய்ததுதான் தவறு என்று சொல்லவைத்து நொறுங்கவைத்து மகிழ்ந்ததையும் நேற்று கண்டபோது, தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மேலோங்கியது.
அதோடு நிற்கவில்லை. வெறிபிடித்த விலங்குகள் போல சுற்றிநின்று அந்தப் பெண்ணை உணர்வளவில் சின்னாபின்னமாக்கிய அந்த ஆண்களைப் பாராட்டி, Bigg Boss வரலாற்றிலேயே சிறந்த பங்கேற்பாளர் என்கிற பட்டத்தையும் வழங்கியது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒரு தொகுப்பாளருக்கு அழகா?
போட்டியாளர்களும் உங்களையும் என்னையும் போல மனிதர்தானே? அவரவர்க்கு ஒரு பேசும், சிந்திக்கும், செயல்படும் விதம் இருப்பதும் இயற்கைதானே? அதை கிண்டலடிப்பதும், கடுமையாக சாடுவதும், இவர் நினைப்பதையே அவர்கள் சொல்லவேண்டும், அதை இவர் விரும்பும் வண்ணமே சொல்லவேண்டும் என்பதும், சொல்லாவிட்டால் சினமடைவதும், சலித்துக்கொள்வதும், எதிரில் நிற்பவரைப் பொதுவெளியில் கேவலப்படுத்துவதும், வேண்டா வெறுப்போடு அவர்களிடம் உரையாடுவதும் ஒரு தொகுப்பாளருக்கு அழகா?
பணத்துக்காக நிகழ்ச்சி நடத்த வருபவர் குறைந்தபட்ச பொறுப்போடு, கண்ணியத்தோடு, ஈடுபாட்டோடு நடத்தவேண்டும். தமிழ்ச்சமூகமே, விழித்துக்கொள்! வல்லவரெல்லாம் நல்லவர் என்பதில்லை என்பதை விளங்கிக்கொள்! புகழின் உச்சியில் இருப்பவர்க்கு சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவூட்டு! என பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |