மரண தண்டனைக்கு முன் திருமணம்… சில மணி நேரங்களே நீடித்த காதல் வாழ்க்கை!
ஈரானில் மரண தண்டனைக்கு உள்ளாகவிருந்த காதலனை, தூக்கிலிடப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு தொலைபேசி வாயிலாகத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணின் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறி, காதலர்களான அலிரேசா செபாஹி (25), மஹ்ஷத் கஷானி (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் அலிரேசாவுக்கு மரண தண்டனையும், மஹ்ஷத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் தூக்கிலிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்ற அலிரேசா, பின்னர் சுயநினைவு பெற்றார். இதனால் அவரது மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
தூக்குமேடைக்கு முன் திருமண உறுதிமொழி!
இந்நிலையில், அலிரேசாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் இருவரும் தொலைபேசி வாயிலாகத் திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இருவரின் தந்தையர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மனித உரிமை வழக்கறிஞர் அமீர்சலார் தாவூதி, திருமண நிகழ்வை நடத்த உதவினார். மணமகளின் குடும்பத்தினரால் பாரம்பரியப் பரிசாக குர்ஆன் பிரதியொன்றும், குங்குமப்பூ கற்கண்டும், ஒற்றைச் சிவப்பு ரோஜாவும் மட்டுமே வழங்க முடிந்தது.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் மணமகள் மட்டுமன்றி, சிறை அதிகாரிகளும் கண்கலங்கியதாக வழக்கறிஞர் தெரிவித்தார். திருமண முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியபோதும், “நான் அலிரேசாவை விரும்புகிறேன்” எனக் கூறி மஹ்ஷத் தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில மணி நேரங்களே வாழ்க்கை!
திருமணம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அலிரேசா செபாஹி தூக்கிலிடப்பட்டுள்ளார்.வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க வேண்டும் என்ற கனவுடன் திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக்கொண்ட இருவரின் காதல், சில மணி நேரங்களிலேயே மரணத்தால் பிரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |