நான் சூர்யாவை விட 3 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்- நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர்.
ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவர் உறுதுணையாக இருப்பதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
2003ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தின் போது, ஜோதிகா முன்னணி நடிகையாக இருந்தார்.
அப்போது சூர்யாவை அந்தப் படத்தில் நடிக்க பரிந்துரைத்தது ஜோதிகாதான் என அவர் முன்பே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சூர்யா - ஜோதிகா அண்மையில் ஆங்கில யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் "என் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் சூர்யாவை விட நான் மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினேன். தற்போது நான் அவரைவிட சுமார் 30 மடங்கு குறைவாக சம்பளம் வாங்குகிறேன்" என்று ஜோதிகா நகைச்சுவையாக கூறினார்.

மேலும், "சூர்யா ஒரு நல்ல மனிதர், நல்ல கணவர். வீட்டில் எப்போதும் சமத்துவத்தையே கடைப்பிடிப்பார். நான் சமையல் செய்தால் அவரும் வந்து உதவுவார், குழந்தைகளை வளர்ப்பது முதல் விடுமுறைக்குச் செல்வது வரை எல்லா முடிவுகளையும் இருவரும் சேர்ந்து எடுப்போம். ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் மனதார மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம்" என்று ஜோதிகா பகிர்ந்தார்.
