வெண்டைக்காயும் தொக்கு இப்படி ஒருக்க செஞ்சு பாருங்க..
பொதுவாக வெண்டைக்காயை பொரியல், சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு தொக்கு செய்துள்ளீர்களா? வெண்டைக்காயில் தொக்கா என்று கேட்கலாம். ஆம், வெண்டைக்காய் கொண்டு ஒருமுறை தொக்கு செய்யும் போது, அதை மூன்று வேளையும் வைத்து சாப்பிடலாம்.
முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காய் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் இந்த பக்குவத்தில் வெண்டைக்காய் தொக்கு செய்து கொடுங்கள், சுவை பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இந்த தொக்கு இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த வெண்டைக்காய் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்:
வறுப்பதற்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மல்லி விதை - 4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்டைக்காய் - 400 கிராம்
உப்பு - 1 டீஸ்பூன்
பெரிய தக்காளி - 1
பூண்டு - 4-5 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸபூன்

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும்.
வெண்டைக்காயில் பிசுபிசுத்தன்மை போனதும், நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் பூண்டு, மிளகாய் தூள் மற்றும் புளியை சேர்த்து வாணலியின் சூட்டில் வதக்கி குளிர வைக்க வேண்டும்.
அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் வதக்கிய வெண்டைக்காய் கலவையை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விட்டு, பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து கிளறி, அரைத்ததை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால், வெண்டைக்காய் தொக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |