சிக்கன் 65 சலிச்சு போச்சா? 15 நிமிடத்தில் மணக்க மணக்க குண்டூர் சிக்கன் ரோஸ்ட்
Chicken Roast Recipe: சிக்கன் ரோஸ்ட் ரெசிபி குண்டூர் ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கன் அதிகமாகவே இருக்கின்றது. சிக்கனில் பிரியாணி, கிரேவி, குழம்பு, சிக்கன் 65 இவ்வாறு செய்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால் சற்று வித்தியாசமாக சிக்கனை ரோஸ்ட் செய்து குண்டூர் சிக்கன் ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். இந்த சிக்கன் ரோஸ்ட் சாதம், பரோட்டா, சப்பாத்தி இவைகளுக்கு அட்டகாசமான சைடிஷ்ஷாகவே இருக்கும்.

தேவையான பொருட்கள்
மசாலாப் பொடிக்கு
கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 5-6
ஏலக்காய் - 4
மராத்தி மொக்கு - ¼
நட்சத்திர சோம்பு - ½
இலவங்கப்பட்டை - 1 இன்ச்
சீரகம் - ½ டேபிள் ஸ்பூன்
சிக்கனை வேகவைக்க
கோழி இறைச்சி - ½ கிலோ
பச்சை மிளகாய் - 4
இலவங்கப்பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 3
இஞ்சி- ஒரு விரல் அளவு
பூண்டு - 15 அல்லது 20 பல்
மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு

சிக்கன் ரோஸ்டுக்கு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - ½ டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 3 கொத்து
சிக்கன் ஸ்டாக் - 3-4 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ¼ டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - ½ பழம்
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை முதலில் தண்ணீரில் அலசி நன்றாக மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தினையும் தனியாக சாறு பிழிந்து எடுத்து வைக்கவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி இவற்றினை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் கீறி எடுத்து வைப்பதுடன், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவற்றினை தண்ணீரில் அலசி பொடியாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் வறுப்பதற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வறுத்து எடுத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், இலவங்கம், கிராம்பு, அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் பிரியாணி இலை இவற்றினை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேக வைத்து சிக்கனையும், தண்ணீரையும் தனியாக பிரித்து வைக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் வேக வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
மேலும் இதனுடன்மசாலா பொடிகளை சேர்த்து நன்றாக கிளறியதும், இதனுடன் வேக வைத்த சிக்கன் தண்ணீரை சிறிதளவு சேர்த்து வேக வைக்கவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து 3 நிமிடம் கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான குண்டூர் சிக்கன் ரோஸ்ட் தயார்.