ஒரு வருஷமே ஆனாலும் கெட்டுப்போகாத இடியாப்ப மாவு.. ரேஷன் அரிசியை வைத்து எப்படி செய்யலாம்?
ரேஷன் கொடுக்கப்படும் அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதை வீணாக்காமல் நமக்கு கிடைக்க சாதம் தான் வடித்து சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. அரிசியை வீணாக்காமல் வேறு வழிகளிலும் அதனை உபயோகப்படுத்தலாம்.
அதிலும் முக்கியமாக கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு போன்ற உணவு வகைகளை சுவையான பக்குவத்தில் செய்து மகிழலாம். அந்த வகையில் ரேஷன் அரிசி வைத்து இடியாப்ப மாவு எப்படி செய்வது? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
முதலில் ரேஷன் அரிசியில் பச்சை அரிசியை எடுத்துக் கொண்டு அதில் கல், குருணை போன்ற பொருட்களை நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து, சுத்தம் செய்த இந்த அரிசியை மூன்று முறை தண்ணீரில் நன்கு கலைந்து அலசி வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அரிசி மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீர் ஊற்றி சுமார் 4 மணி நேரம் அளவிற்கு ஊற வையுங்கள். நான்கு மணி நேரம் கழித்து அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விடுங்கள். பின்னர், அரிசியில் கொஞ்சம் கூட தண்ணீர் இருக்கக் கூடாது. ஆனால் அரிசி ஈரப்பதத்துடன் அப்படியே இருக்க வேண்டும்.
இதனை கொஞ்சமாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் நைஸாக அரைத்தாலும் அதிலும் குருணை இருக்க தான் செய்யும். எனவே நன்கு சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் குருணையுடன் சேர்த்து ஊறிய அரிசியை மீண்டும் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் ஊற வைத்த எல்லா அரிசியையும் சேர்த்து மாவாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். கிடைத்த மாவை சலித்த பின்பு கை வைத்து நன்கு அழுத்தி விடுங்கள். அப்பொழுது தான் மாவு காற்றுபட்டு உணர்ந்து போகாமல் இருக்கும்.
பின்னர் ஒரு இட்லி பானையில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டை துணியால் மூடி வைக்கவும். இதன்பின்னர், துணியின் மீது அரிசி மாவை உதிர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேக விடவும்.
அரிசி நன்கு வெந்து கைகளில் தொட்டுப் பார்த்தால் சேமியா போல உருண்டு வரும். இது சரியான பதமாக இருக்கும். கடைசியாக நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை விட்டு நன்கு பிசைந்து ஐந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் செய்து முடித்து விடலாம்.
இடியாப்பம், கொழுக்கட்டை, புட்டு போன்ற உணவு வகைகள் அதிக சுவையுடனும், அற்புதமான மணமுடனும் ஆளை தூக்கும், நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்