Mutton curry : பாரம்பரிய சுவையில்.. மணமணக்கும் தண்ணி மட்டன் குழம்பு
Mutton curry : ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ சமையலுக்கு தனி இடம் உண்டு. அதிலும் மட்டன் என்றால் சொல்லவே வேண்டாம்!
ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பை செய்து சாப்பிட்டு கொஞ்சம் அலுத்துவிட்டீர்களா? அப்படியானால், இந்த வார ஞாயிற்றுக்கிழமை உங்கள் சமையலறையில் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து பாருங்கள்.

காரமும், மணமும், மசாலாவின் சுவையும் நிறைந்த அரைச்சு வைத்த மட்டன் தண்ணி குழம்பு எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு முறை செய்து பார்த்தால், வீட்டில் அடிக்கடி செய்யச் சொல்லும் அளவுக்கு சுவையாக இருக்கும்!
பொதுவாக ரெஸ்டாரண்ட்களில் சுவைக்கக் கிடைக்கும் இந்த ஸ்பெஷல் மட்டன் தண்ணி குழம்பை, வீட்டிலேயே மிக எளிதாகத் தயாரிக்கலாம்.

இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி, நான் மட்டுமல்ல… சூடான சாதத்துடனும் இந்த குழம்பு செம காம்பினேஷன்! இந்தக் குழம்பின் ஸ்பெஷலே அதன் மணமும், காரம் கலந்த மசாலா சுவையும் தான். இந்த குழம்பை எளிமையாக படிமுறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுப்பதற்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
வரமிளகாய் – 10
மிளகு – 1 டீஸ்பூன்
மல்லி – 1/2 கப்
கறிவேப்பிலை – 2 கொத்து
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
வதக்குவதற்கு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 கப் அல்லது 150 கிராம்
தக்காளி – 2 (நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய், மல்லி, மிளகு, கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, கசகசா மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.
பின்னர் இதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற விடவும். அதே வாணலியில் மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் சற்று நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து ஒரு முறை நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதையும் ஆற விடவும். அடுத்து மிக்சர் ஜாரில் ஆறிய வறுத்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வதக்கிய வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கிளறவும். அதில் 3½ கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
குக்கரை மூடி, அதிக தீயில் 1 விசிலும், பின்னர் குறைந்த தீயில் 3 விசிலும் விட்டு அடுப்பை அணைக்கவும். குக்கரில் உள்ள அழுத்தம் முழுவதுமாக வெளியேறியதும் மூடியைத் திறந்து, மேலே சிறிது கொத்தமல்லி தூவவும்.
இறுதியாக தாளிக்க, ஒரு சிறிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதை மட்டன் குழம்பில் ஊற்றி நன்றாக கலந்து, நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் மணமும் சுவையும் நிறைந்த தண்ணி மட்டன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |