காய்கறியே தேவை இல்லை - வெறும் கறிவேப்பிலை வைத்து தம்புளி செய்ங்க
பொதுவாக வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கும். இதற்கு இளநீர் கரும்பு ஜீஸ் போன்றவை குடிப்போம்.
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் தயிர், மோர் என்று அதிகம் உணவில் சேர்ப்போம். இப்படி வெறும் தயிர், மோரை சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றைக் கொண்டு தம்புளி செய்தால் சுவையும் அதிகமாக இருக்கும் உடலுக்கு நீர்ச்சத்தும் கிடைக்கும்.
இந்த தம்புளி செய்ய காய்கறிகள் எதுவும் தேவையில்லை. 1 கைப்பிடி கறிவேப்பிலையும் தயிர் போன்றவை மிக முக்கிய பொருட்களாக இருந்தால் போதும்.
இது ஒரு கர்நாடகா ஜ்டைல் ரெசிபி ஆகும். இதை செய்வது சுலபம். எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். இதை செய்ய 10 நிமிடங்கள் இருந்தால் போதும்.

தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கிய
- தேங்காய் - 1/4 கப்
- உப்பு - சிறிது
- தண்ணீர் - சிறிது
- மோர் - 1 கப்
தாளிப்பதற்கு
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்னர்மிக்ஸி ஒன்றில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். அதன் பின் அதில் 1 கப் மோரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தம்புளியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கறிவேப்பிலை தம்புளி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |