ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இட்லி சாம்பார் செய்ய தெரியுமா? இந்த பொருள் சேர்த்தால் போதும்
பொதுவாக இட்லி சாம்பார் என்பது பருப்பு மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளை சேர்த்து செய்யப்படும் உணவுகளில் ஒன்று.
சாம்பாரில் ஏகப்பட்ட காய்கறிகள் சேர்த்து ஒன்றாக சாப்பிடுவதால் அதிலிருக்கும் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு நல்ல பலனை கொடுக்கின்றன.
இவ்வாறு தயாரிக்கப்படும் சம்பாரை நாம் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, வடை ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறலாம்.
இவற்றை தாண்டி சிறுவர்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தனியாக குட்டி குட்டி இட்லி செய்து சாம்பாரில் ஊற வைத்து பரிமாறலாம்.
அந்த வகையில் தமிழர்கள் மட்டுமல்ல இட்லி சாம்பார் வெளிநாட்டவர்களையும் சுவையால் ஈர்க்கும் அற்புதம் கொண்டது.
இவ்வளவு சுவையான இட்லி சாம்பாரை வீட்டில் இருந்து கொண்டே ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம்பருப்பு - 1/4 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- சின்ன வெங்காயம் - 10
- உருளைக் கிழங்கு - 1
- தக்காளி - 2
- கத்தரிக்காய் - 1
- கேரட் - 1
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
- சாம்பார் பொடி - 1 டீ ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 8
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
இட்லி சாம்பார் செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் சாம்பாருக்கு தேவையான புளியை கரைசலை முதலில் தயார் செய்து கொள்ளவும்.
2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து கழுவிய துவரம்பருப்பு, பாசிப்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
3. அடுத்த அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளிக்கவும். வாசம் வரும் போது சுத்தம் செய்து வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
4. சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதங்கிய பின்னர் சாம்பார் பொடி, நறுக்கிய கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கை ஆகியவற்றையும் அதில் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
5. காய்கறிகள் ஓரளவு வெந்தவுடன் புளிக்கரைசல், உப்பு இவை இரண்டையும் சேர்த்து கலந்து விடவும். பின்னர் தனியாக வேக வைத்திருக்கும் பருப்பை ஒன்றாக கலந்து கொதிக்க விடவும்.
6. மிதமான சூட்டில் கொதித்த பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறினால் சுவையான இட்லி சாம்பார் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |