அட்டகாசமான சுவையில் தயிர் உப்புமா.... எப்படி செய்றதுனு தெரியுமா?
தயிர் வடை, தயிர் பச்சடி போன்ற உணவுகளை சுவைத்திருக்கும் நாம் தயிர் உப்புமா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாரம்பரியமாக இருக்கும் ரவை உப்புமா பெரும்பாலான நபர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் உப்புமாவைக் கண்டால் தெறித்து ஓடிவிடுகின்றனர்.
ஆனால் தற்போது வித்தியாசமான முறையில் தயிரில் உப்புமா செய்து கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். தயிர் உப்புமா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
ரவை -1 கப்
தயிர் - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் -2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு ரவையை சேர்த்து கட்டி விழாமல் உப்புமா பதத்திற்கு கிண்டி இறக்கவும்.
உப்புமா சற்று வெதுவெதுப்பாக இருக்கும் போது தயிர் சேர்த்து மெதுவாக கிளறவும். தயிரை கொதிக்க வைக்கக்கூடாது.. கடைசியாக கொத்தமல்லி சேர்த்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
