கீரை வாங்குனா இப்படி தொக்கு செய்ங்க - கொஞ்சம் கூட மிஞ்சாது
பெரும்பாலும் பலரும் விரும்பி சாப்பிடாத ஆரோக்கியமான உணவு என்றால் அது கீரை தான். கீரையை வைத்து பல ரெசிபிகளில் செய்து சாப்பிட்டு இருப்போம்.

கீரையை எப்படி சமைத்தாலும் சுவையாகவே இல்லை என நினைத்து அதை சமைப்பதையே தற்போது மறந்து விட்டார்கள். இதற்கு பதிலாக வைட்டமின் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில் கீரை வாங்கினால் அதை மிகவும் சுவையாக பாலக்குரா உள்ளி காரம் என்று அழைக்கப்படும் ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு செய்முறை உள்ளது.
இந்த ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதுடன் சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கு அட்டகாசமாக இருக்கும்.
பெரும்பாலான ஆந்திரா ஹோட்டல்களில் இந்த கீரை தொக்கு பிரதானமாக வைக்கப்பட்டிருக்கும். இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
1 கட்டு பாலக் கீரை(மற்ற கீரைகளிலும் செய்யலாம்)
அரைக்க
2 பெரிய வெங்காயம்
10 பூண்டு பல்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
எலுமிச்சைச் சாறு 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க
2 ஸ்பூன் நல்லெண்ணெய்
½ ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 ஸ்பூன் கடலைப்பருப்பு
¼ ஸ்பூன் சீரகம்
1 வர மிளகாய்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
கீரை தொக்கு செய்ய முதலில் பாலக் கீரையை நன்கு கழுவி நறுக்கி தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் மிக்சியில் அரைக்கும் பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். கடுகு, சீரகம் பொரிந்ததும் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
பின்னர் அரைத்ததை சேர்த்து சில நிமிடங்களுக்கு நன்றாகக் கிளறவும். பின்னர் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் சிறிது நீர் சேர்த்து, கீரையின் பச்சை வாசனை நீங்கி அது நன்கு வேகும் வரை கொதிக்க விடவும். தொக்கு நன்கு கெட்டியானதும் உப்பு பார்த்து இறககினால் சுவையான தொக்கு தயார்.