வீட்டில் மணத்தக்காளி இருக்கா? அப்போ இப்படி குழம்பு செய்ங்க 2 வாரம் கெடாது
என்னதான் பல வகை கறிகளை செய்தாலும் மதிய நேர சாப்பாட்டிற்கு சூடான சாதம் வைக்கும் போது அதற்கேற்ற ஒரு காரசாரமான குழம்பு தேவைப்படும்.
அது சைவதாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் சரி காரசாரத்திற்கு பஞ்சம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்படி ஒரு குழம்பு தான் இன்று நாம் மணத்தக்காளியை வைத்து செய்யப்போகிறோம்.
இந்த குழம்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ண முடியும். சுவையம் காரசாரமாக அவ்வளவு நன்றாக இருக்கும். இதை 2 வாரம் வரை அப்படியே வைக்கலாம். இதன் செய்முறை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மணத்தக்காளி வத்தல் - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
- பூண்டு - 200 கிராம்
- நல்லெண்ணெய் - 50 மிலி
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- வெல்லம் - 1 டீஸ்பூன்
- புளி - 2 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அது சூடானதும், கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் மணத்தக்காளி வத்தலையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, குறைவான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் புளி நீரை ஊற்றி, வெல்லத்தை சேர்த்து கிளறி, குழம்பு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து, எண்ணெய் பிரியத் தொடங்கியதும், அடுப்பை அணைத்தால், சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |