வெரைட்டி சாதத்திற்கு தொட்டுக்க அருமையான வாழைக்காய் வறுவல்- செய்வது எப்படி?
வாழை மரத்தில் காய்க்கும் பூவில் இருந்து பழம், காய் என அனைத்திலும் சாப்பிட பல வகையான நன்மைகள் உண்டு.
மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
வாழைக்காய் வறுவல் எப்படி செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2 கடுகு – 1 ஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மல்லி அல்லது தனியா தூள் – 2 ஸ்பூன் வெங்காயம் (சுவைக்கேற்ப) இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 1/2 டீ ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் – தேவையான அளவு மிளகு தூள் – 1 ஸ்பூன் எண்ணெய் – 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைக்காயின் தோலை நன்றாக சீவிவிட்டு, ஒரு கனமான சைஸில் துண்டு துண்டாக வெட்டிக் கொள்வோம். அதன்பிறகு வெடிய வாழைக்காயை தண்ணீரில் போட்டுக்கொள்வோம்.
அதன் பின்னர், ஒரு கடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, கடுகு சேர்க்கவும். கடுகு நன்கு பொறிந்து வந்த பின்னர் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் அதிகம் சேர்த்தால் சுவை மாறிவிடும்.
எனவே தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். பிறகு கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும். அதன் பின்னர், இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
இந்த இஞ்சி – பூண்டு பேஸ்ட்டில் இஞ்சி மற்றும் பூண்டின் அளவு சரிசமமாக இருத்தல் வேண்டும். இஞ்சி – பூண்டு பேஸ்ட் நன்கு வதங்கி வரும் வேளையில், நம்மிடம் உள்ள மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்வோம்.
பின்னர், மல்லி பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும். இவை கொதிக்க ஆரம்பிக்கும் போதே சிறிதளவு உப்பு சேர்க்கவும். அதோடு சிறிதளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும். இந்த மசாலாக் கலவை நன்றாக கொதித்து வந்த பிறகு, முன்பு வெட்டி வைத்துள்ள வாழைக் காயை அவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது அவற்றை 2 முதல் 3 நிமிடங்களுக்கு தண்ணீர் சேர்க்காமல் மசாலாவோடு சேர்த்து கிளற வேண்டும். அப்போது தான் மசாலா கலவை வாழைக்காயோடு நன்றாக ஒட்டும். பிறகு வாழைக்காய் நன்கு வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், பாத்திரத்தை மூடியால் மூடி 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். அவை நன்கு வெந்த பிறகு, இப்போது மிளகு தூளை சேர்த்து மெதுவாக கிளறவும். இல்லையென்றால் வாழைக்காய் உடைந்து விடும்.
எனவே சற்று நிதானமாகவே கிளறவும். பிறகு சில நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கவும்.
இப்போது அவை நன்றாகவே வெந்து இருக்கும். இந்த சைடிஷ்சை சாம்பார், தயிர் மற்றும் ரசம் போன்ற சாதங்களுடன் சேர்த்து உண்டால் அருமையாக இருக்கும்.