இயற்கையான முறையில் உடற்சூட்டை குறைப்பது எப்படி?
பொதுவாக கோடை காலத்தில் உடற்சூடு அதிகமாகவே இருக்கும், இதனால் கண் எரிச்சல், நீர்க்கடுப்பு என வெயில் கால நோய்கள் நம்மை தொற்றிக்கொள்ளும்.
இதற்காக உடலை குளிர்ச்சியாக்கும் உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவில் உடலை குளிர்ச்சியாக்க என்ன சாப்பிடுவது என தெரிந்து கொள்வோம்.
முதலில் பருத்தி துணிகளால் ஆன காட்டன் உடைகளை தெரிவு செய்து அணிந்து கொள்ளுங்கள்.
வெளியில் செல்வதாக இருந்தால் அகலமான தொப்பி, சன் ஸ்கிரீன், குடை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.
சூட்டை குறைக்கும் பானங்கள்
வியர்வை அதிகமாக வெளியேறும் போது அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இழப்பு ஏற்படும், இதனை சரிசெய்ய காலை உணவுடன் மோர் அருந்துவது பலனை தரும். வெயில் காலங்களில் மோர் மிகச்சிறந்த பானமாகும்.
விட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை பழம் குளிர்ச்சியை தரும், உடலை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு ஆக்ஸிஜனேற்றத்தையும் வழங்கும்.
இதேபோன்று இளநீர் அருந்தலாம், கனிமசத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இளநீர் உடலை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது.
இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை அருந்துவதும் சிறந்தது, நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், நுங்கு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ளவும், இதுதவிர தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதும் உடற்சூட்டை குறைத்துவிடும்.