காய்கறிகள் நிறைந்த கோதுமை அடை தோசை... எப்படி செய்வது?
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் ஆரோக்கியமான காலை உணவை தெரிவு செய்வது மிகவும் சவாலான விடயமாகவே காணப்படுகின்றது.
இதனால் காலை நேரத்தில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் உணவு தயாரிக்க சிரமப்பட்டு பலரும் காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர்.
ஆனால் அது முற்றிலும் தவறானது. உடல் ஆராக்கியத்தில் காலை உணவு முக்கிய பங்குவகிக்கின்றது. அந்த வகையில் கோதுமை மற்றும் காய்கறிகளை கொண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோதுமை அடை தோசை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 2 தே.கரண்டி
பச்சரிசி மாவு - 2 தே.கரண்டி
கடலை பருப்பு - 1/2 தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பச்சரிசி மாவு, ரவை, சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பூண்டு பல், இஞ்சி துண்டு, சீரகம் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜார் ஒன்றில் போட்டு பேஸ்ட் பதத்தில் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மாவு கலவையுடன் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து 5 தொடக்கம் 10 நிமிடங்கள் வரையில் நன்றாக மூடி ஊறவைக்க வேண்டும்.
பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கடலை பருப்பு போட்டு பொறியவிட வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை போட்டு லேசாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த வதக்கிய காய்கறிகளை நாம் ஏற்கனவே ஊறவைத்துள்ள மா கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை கல் ஒன்றை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் தடவி ஏற்கனவே கலந்து வைத்துள்ள மாவை அடையாக தட்டி அதில் போட வேண்டும்.
பின்னர் ஒருபுறம் அடை தோசை பொன்னிறமாக வெந்ததும் அதனை திருப்பி போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் காய்கறிகள் நிறைந்த கோதுமை அடை தோசை தயார்.
அதில் காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |