ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான மீன் குழம்பு... - எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம்?
மீனில் உள்ள சத்து -
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. மீனில் நல்ல கொழுப்பு சத்து நிறைந்துள்ளது.
மீனில் ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
தேவையான பொருட்கள்
மீன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 8
இஞ்சி, பூண்டு விழுது – 6 ஸ்பூன்
தக்காளி – 6
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
புளி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
குழம்பு தாளிக்க
கடுகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 20
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில், மீனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், புளியில் கொஞ்சம் தண்ணீர் கலந்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில், முதலில் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதன் பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக நன்றாக வதக்க வேண்டும். பின்னர் வெட்டி வைத்த தக்காளி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதன் பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானதும், அதில் மீனை சேர்த்து 2 கொதி விட வேண்டும். பின்னர் நெருப்பை அணைத்து விட்டு, மீன் குழம்பின் மேல் கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு ரெடி... சாதம், தோசை, இட்லிக்கு இந்த குழம்பு ரொம்ப சுவையாக இருக்கும்.