செரிமான பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது?
பொதுவாக சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.
வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதில் இருந்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது வரை, இஞ்சி பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது.
அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பல நோய்களைத் தடுக்க உதவுகின்றன, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது.
இஞ்சியில் நிறைந்துள்ள வாசோடைலேட்டர் பண்பு இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதனால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் சீராக நடைபெற துணைப்புரிகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியில் எவ்வாறு அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி- 1/2 கப்
கடலை பருப்பு- 2 தே.கரண்டி
காய்ந்த மிளகாய்-5
கறிவேப்பிலை- சிறிதளவு
புளி- தேவையான அளவு
வெல்லம்-1தே.கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தம் செய்து சிறிய தூண்டுக்ளாக நறுக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கடலை பருப்பு,காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிட வேண்டும்.
ஆறியதும் வதக்கிய பொருளுடன் சிறிதளவு புளி கரைசல்,மற்றும் வெல்லம் சேர்த்து ஒரு மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து அதனை அரைத்த சட்னியில் ஊற்றினால் அவ்வளவு தான் இஞ்சி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |