வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது!
இந்திய சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் பூண்டு அதன் தனித்துவமான மணம், சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கும், மருத்துவ குணங்களுக்கும் பெயர் பெற்றது.
பூண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இது வெள்ளை இரத்த அணுக்களின் தொகுப்பைத் தூண்டுகிறது.

தொற்றுநோய்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியம் வெள்ளை இரத்த அணுக்கள் முக்கியமானது. பூண்டு குறிப்பிடத்தக்க இருதய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், எல்.டி.எல் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது.இந்த நன்மைகள் ஒன்றாக ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும்.

மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. அது போல் கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.
இது கூந்தல் வளர்ச்சி முதல் எடை குறைப்பு வரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. மேலும் சரும ஆரோக்கியத்துக்கும் துணைப்புரிகின்றது.

இவ்வளவு மருத்து நன்மைகளை கொண்டுள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலையை கொண்டு அசத்தல் சுவையில் ஒரு வாரம் வரையில் கெடாமல் இருக்கும் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
பூண்டு - 2 கையளவு
கட்டிப் பெருங்காயம் - 4 துண்டு
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/4தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 1/2 மேசைக்கரண்டி
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (நறுக்கியது)
இஞ்சி - 3 சிறிய துண்டு
தக்காளி - 1 1/2 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சின்ன வெங்காயம், இஞ்சி, நாட்டு பூண்டு சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரையில், நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு அதில் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து அதில் 1 கைப்பிடி நாட்டுப்பூண்டு , 4 பெருங்காயக் கட்டியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை 1 கைப்பிடி சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.

அதனையடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறிவிட்டு, மூடி வைத்து, எண்ணெய் பிரியும் வரையில், கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கறிவேப்பிலை பூண்டு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |