அசுர வேகத்தில் கொத்து கொத்தாக முடி கொட்டி வழுக்கை விழுந்து விட்டதா....இதோ தீர்வு!
முடி உதிர்வு என்ற கொடிய ஆபத்து இன்று எல்லா வயதினருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்னையாக அசுர வேகத்தில் உருவெடுத்துள்ளது.
ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.
இதற்கு முறையற்ற பழக்கவழக்கங்கள் ஓர் முக்கிய காரணமாகும். அது தவிர உடல் உஷ்ணம், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
அதிகரிக்கும் முடி உதிர்வுக்கு காரணம் என்ன?
இன்றைய இளைஞர்கள் தலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்த்து ஜெல்களையே பயன்படுத்துகின்றனர். அப்படித் தலைக்குப் பூசும் ஜெல்களில் இருக்கும் ரசாயனங்கள் முடியைப் பலவீனப்படுத்துவதுடன் முடி உதிர்வுக்கும் காரணமாகிறது.
செயற்கை எண்ணெய்களும் முடி உதிர்வை அதிகரிக்கச் செய்யும். செயற்கை எண்ணெய்கள் தலையில் இருக்கும் மயிர்க்கால்களை வறண்டுபோகச் செய்துவிடும்.
ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவை தலையில் உள்ள செல்களை அழிப்பதுடன் முடி உதிர்வையும் ஏற்படுத்திவிடும்.
யோகா, தியானம் போன்றவை மனஅழுத்தத்தைக் குறைத்து, உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். தினந்தோறும் பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதிசயம் செய்யும் நல்லெண்ணெய்
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை தலைக்குத் தேய்ப்பது, வாரம் ஒருமுறை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதால் இழந்த முடியை மீள பெறமுடியும்.
காலையில் இளஞ்சூடான நீரில் குளிப்பதால் உடல் உஷ்ணம் கட்டுப்படுவதுடன் மயிர்க்கால்களுக்குத் தேவையான சத்துகளும் எளிதாகக் கிடைக்கும்.
இதனால் முடி உதிர்வையும் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான அமினோ அமிலம் உற்பத்தியாகி முடி உதிர்தல் குறையும்.
தினசரி தலை சீவும் பொழுது முடி உதிர்வது இயல்பானது தான்.
ஆனால் சில நேரங்களில் எக்கச்சக்கமாக முடி கொட்டி, பெண்களுக்கு அடர்த்தி குறைந்து, மெலிந்து போதல் மற்றும் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதல் போன்ற தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்டால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும்.
ஏனென்றால் அதிகப்படியான முடி கொட்டுவதற்கு உடல்நலக் கோளாறுகள் அல்லது குறைபாடுகள் கூட காரணமாக இருக்கலாம்.
முடி கொட்டுவதுதோடு தொடர்புடைய உடல்நலக் கோளாறு
தைராய்டு குறைபாடுகள்
முடி உதிராமல் இருக்கவும், முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாக வளரவும் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறிப்பாக தைராய்டு கிளாண்ட் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கிரகிக்க உதவுகிறது.
இந்த சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு அவசியமானவை. நீங்கள் தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு கடுமையான முடி இழப்பு ஏற்படலாம்.
அலோபேசியா
அலோபேசியா என்பது ஒரு ஆட்டோ இம்யூன் குறைபாடு. அதாவது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிக்கப்படும் பொழுது பலவித குறைபாடுகள் தோன்றும்.
அலோபேசியா என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் தீவிரமான முடி உதிர்வு மற்றும் வழுக்கை ஏற்படும் நிலையைக் குறிக்கிறது.
கொத்துக் கொத்தாக முடி கொட்டுதல், குறிப்பிட்ட இடங்களில் திட்டு திட்டாக வழுக்கை விழுதல், அல்லது முழுவதுமாக வழுக்கை தோன்றுதல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
மன அழுத்தம்
சமீபகாலமாக, பலருக்கும் அதிகமாக முடி கொட்டுதல் என்பது மன அழுத்தத்தோடு தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மூன்று வகை பாதிப்புகள் உள்ளன. டெலோஜென் எஃப்லுவியும் என்பது தீவரமான மன அழுத்தத்தால், முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி, முடி உதிர்வை உண்டாக்கும் நிலையைக் குறிக்கிறது.
ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாக முடிகளை தலையில் இருந்து பிடுங்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இதனால் ஏற்படும் முடி உத்திரவுக்கு டிரிகோடில்லோமேனியா என்று பெயர்.
மூன்றாவதாக, அலோபேசியா, நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுகள்
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் சரியாக செயல்பட ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு இன்றியமையாததோ அதே போல முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை.
உங்கள் உணவில் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய தேவையான இரும்பு, ஜின்க், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல், முடி வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படும்.
இரும்பு சத்து குறைபாடு இருந்தால் கூந்தலின் வேர்களுக்கு ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் தடைபடும். வேர்கள் வலுவிழந்து கூந்தல் உதிரத் தொடங்கும். செல்கள் மட்டும் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக வேலை செய்வதற்கு ஜின்க் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதைப்போல முடிக்கற்றைகள் அடர்த்தியாக வளர்வதற்கு ப்ரோட்டின் அவசியம்.
ஒரு நாளைக்கு சாதாரணமாக எத்தனை முடி வரை கொட்டும்
தலையில் உள்ள 10 லட்சம் - 15 லட்சம் முடிகளில் ஒரு நாளைக்கு 80 - 100 முடிகள் வரை இழக்கிறார்கள்.
இந்த அளவு இயல்பானது தான். இதற்கும் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும் போது தான் நாம் மருத்துவரை காண வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கிட்டத்தட்ட 5% பேர்கள் அலோபீசியாவால் பாதிப்படைகின்றனர். இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முடி உதிர்ந்த உடன் வளரத் தொடங்கி விடும்.
சிகிச்சைகள்
முடி உதிர்தல் வகைகளைப் பொறுத்து சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஸ்டீராய்டு ஊசிகள்
கார்டிகோஸ்டீராய்டு எனப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் தோலின் வழியாக செலுத்தப்பட்டு அட்ரீனல் சுரப்பி ஹார்மோனை மேம்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.
நோயெதிப்பு சிகிச்சை
டைனிட்ரோகுளோரோபென்சீன் மற்றும் டிபென்சிபிரோன் போன்ற இரசாயனங்களை தலையில் தேய்க்கும் போது மறுபடியும் முடி வளர ஆரம்பிக்கிறது.
லேசர் தெரபி
லேசர் கருவி மூலம் போட்டான்களை தலையில் அனுப்பி கதிரியக்கம் செய்யப்படுகிறது. இதனால் இந்த போட்டான்கள் தலையால் உறிஞ்சப்பட்டு உடனே முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.
முடி மாற்று அறுவை சிகிச்சை
தலையில் ஏற்பட்டுள்ள வழுக்கை திட்டுகளை நீக்கி அந்த பகுதியில் ஆரோக்கியமான முடிகளை நட்டு விடுகிறார்கள் பியூட்டி எக்ஸ்பட்டுகள்.
சூரியக் கதிர் சிகிச்சை
இந்த முறையில் வழுக்கை உள்ள பகுதிகளில் அல்ட்ரா வைலட் கதிர்களை அனுப்பி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சியை தூண்டுகின்றன.
கூந்தல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள்
ஊட்டச்சத்து உணவுகள் - உங்கள் தலைமுடி வளர ஊட்டச்சத்துகள் அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புரதச்சத்து
முடியில் உள்ள கரோட்டீன் தான் முடிக்கு வலிமையை தருகிறது. இந்த கரோட் டீன் உருவாக்கத்திற்கு புரதச்சத்து அவசியம். எனவே புரத உணவுகளான கோழி இறைச்சி, டூனா, கடல் வகை உணவுகள் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் குறைந்த கொழுப்புள்ள மொஸரெல்லா மற்றும் பாலாடைக்கட்டிகள், டோஃபு மற்றும் குயினோவா, முட்டைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரும்புச் சத்து
உங்கள் இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்து மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இந்த இரும்புச் சத்து அளவு குறை யும் போது முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே இதைத் தவிர்க்க கீரைகள், சிவப்பு இறைச்சி, அடர்ந்த பச்சை இலை கீரைகள், உலர்ந்த பழங்கள், பட்டாணி, பீன்ஸ் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் சி
வைட்டமின் சி ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடனாக இருப்பதோடு இரும்பை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. எனவே வைட்டமின் சி உணவுகளை இரும்புச் சத்து உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது நல்லது.
கருப்பட்டி, ப்ளூபெர்ரி, பிரக்கோலி, கொய்யாப்பழம், கிவி, ஆரஞ்சு, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது கொலாஜன் உருவாகுவதற்கு உதவுகிறது. முடியின் தண்டுகளில் உள்ள நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது.
வைட்டமின் ஈ
சூரிய ஒளியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து முடியை பாதுகாக்க வைட்டமின் ஈ அவசியம். இந்த வைட்டமின் ஈ நட்ஸ் வகைகளில் அதிகம் காணப்படுகிறது. துத்தநாகம், செலினியம் போன்ற சத்துகளும் நட்ஸில் உள்ளன. எனவே கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பயோட்டின்
பயோட்டின் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இந்த ஊட்டச்சத்து பருப்பு வகைகளில் காணப்படுகிறது.
இந்த பயோட்டின் சத்து உயிரணு நொதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது, புரதங்களின் கட்டுமானத் தொகுதிகளான அமினோ அமிலங்களின் உற்பத்திக்கு உதவுகிறது. முட்டை, மீன், விதைகள், கேரட், காலி ஃப்ளவர், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளில் பயோட்டின் காணப்படுகிறது.
வைட்டமின் ஏ
முடி உட்பட பல உடல் பாகங்களின் சரியான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு வைட்டமின் ஏ தேவைப்படுகிறது. நமது தலைமுடியில் உள்ள செபாசியஸ் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் ஆரோக்கியமான உச்சந் தலைக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.
எனவே வைட்டமின் ஏ கூந்தலுக்கு கண்டிஷனராக செயல்படுகிறது. விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பொருட்கள், கேரட், பூசணிக்காய் மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ காணப்படுகிறது.
துத்தநாகம்
முடி திசுக்களின் வளர்ச்சி மற்றும் முடிகளை சரி செய்ய துத்தநாகம் மிகவும் அவசியம். துத்தநாகம் குறைபாடு இருந்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும்.
சிப்பிகள், மாட்டிறைச்சி, கீரை, கோதுமை, பூசணி விதைகள் மற்றும் பருப்பு ஆகியவற்றில் துத்தநாகம் காணப்படுகிறது.
செலினியம்
செலினியம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது. முடி உதிர்தல் பிரச்சினைக்கு செலினியம் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான செலினியம் எடுத்துக் கொள்வது நல்லது அல்ல.
தினசரி 25-50 mcg செலினியம் உட்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது.
முடி வளர்ச்சியை தூண்டும் சில உணவுகள்
சோயாபீன்ஸ் - சோயாபீன்ஸ் இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். சோயாபீன் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது.
இது உடல் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை மேலும் உறுதி செய்கிறது. வைட்டமின் ஈ பற்றாக்குறையால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவது முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
ஜூஸ் மற்றும் ஆர்கானிக் உணவு - சிட்ரஸ் பழச்சாறு மற்றும் ஆர்கானிக் காய்கறிகளின் உணவு முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் முடியின் தரத்தையும் அதிகரிக்கிறது.
ஆரஞ்சு சாறு முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் வைட்டமின் சி உள்ளது, இது இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.
பாதாம் - நினைவாற்றலை அதிகரிப்பதில் பாதாம் பிரபலமானது. ஆனால் இது உங்கள் தலைமுடிக்கு சிறந்த உணவு என்று வெகு சிலருக்குத் தெரியும். இதில் ஏராளமான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ உள்ளது.
இது உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க தேவையான சரியான உணவாகும். தினமும் குறைந்தது 5-8 பாதாம் பருப்புகளை சாப்பிட வேண்டும்.
ஓட்ஸ் - ஓட்ஸ் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஓட்ஸ் இரத்தத்தில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதையும் அதிகரிக்கிறது.
பீன்ஸ் - பீன்ஸில் வைட்டமின் பி6 மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது முடி உதிர்வை சரிசெய்வது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான முடி மற்றும் பொடுகு வராமல் தடுப்பதை உறுதி செய்கிறது.
உங்கள் உணவில் இந்த ஐந்து உணவுப் பொருட்களையும் சேர்த்துக்கொள்வது, உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது, எண்ணெய் மசாஜ், ஹேர் பேக்குகள் போன்ற சில நடவடிக்கைகள் முடி உதிர்வைக் குறைக்கும்.
முக்கிய குறிப்பு
முடி உதிர்வை சாதாரணமாக நினைக்க வேண்டாம். முடி உதிர்வு அதிகரித்து கொண்டு செல்லும் நேரத்தில் தாமாக மருத்துவங்களை முயற்சிக்கும் முன்னர் மருத்துவ ஆலோசனையை பெற்று கொள்ளவும்.