பச்சை மிளகாய் அல்வா கேள்விப்பட்டதுண்டா? காரமா மட்டும் இருக்காது
பொதுவாகவே பச்சைமிளகாய் என்றால் காரமாகத்தான் இருக்கும். அதிலும் அல்வா செய்து சாப்பிட்டால்..... எப்படி இருக்கும். காரமாக இருக்குமா அல்லது இனிக்குமா என்ற கேள்வி இருந்துக்கொண்டே இருக்கும்.
பச்சை மிளகாயானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்துக்கு நல்லதாகும். பச்சை மிளகாயில் உள்ள ரசாயன கலவைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
அந்த வகையில் பச்சைமிளகாயைக் கொண்டு அல்வா எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை மிளகாய் - 1 கப்
- சர்க்கரை - ¼ கப்
- முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு
- சோள மாவு - 1 தேக்கரண்டி
- நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக், விதைகளை நீக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாயைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின்னர், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் தண்ணீரில் உள்ள பச்சை மிளகாயை எடுத்து இதில் போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதுபோல் 3 முறை செய்யவும்.
இதன் மூலம், மிளகாயில் உள்ள காரத்தன்மை குறையும். சூடு ஆறியதும், மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்து மிளகாயின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
பின்னர், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து, பச்சை மிளகாய் கலவையில் சேர்த்து, தொடர்ந்து கிளறுங்கள்.
இது நன்றாக கலந்து, ஓரங்களில் நெய் பிரிந்து வரும் சமயத்தில், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து இறக்கி விட வேண்டும். இந்த அல்வா, இனிப்பு, காரச் சுவை கலந்து வித்தியாசமான சுவையில் இருக்கும்.