அரசு ரகசியகங்களை வெளியிட்டதாக சீனாவில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பெண்; காரணம் என்ன?
சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வர்த்தகம், கொரோனா வைரஸ் உள்ளிட்டவையாக இருக்கிறது. இதன் எதிரொலியாக நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு ஆஸ்திரேலிய பொருட்கள் இறக்குமதியை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவும் குறிப்பிட்ட சில சீன பொருட்களுக்கான இறக்குமதியை தடை விதித்துள்ளது.
இப்படி இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், சீன அரசின் ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக ஆஸ்திரேலிய பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை சீனா கைது செய்துள்ளது. மேலும், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பிறந்தவரான செங் லீ, சிறு வயதிலேயே ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டின் குடியுரிமை பெற்றார்.
அதன் பின்னர், 2012-ம் ஆண்டில், சீனாவில் இயங்கிவரும் சி.ஜி.டி.என். சர்வதேச ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியில் சேர்ந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சீனாவின் அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களில் செங் லீயும் ஒருவர் ஆவார். இந்த நிலையில் 6 மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த செங் லீயை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தகவலை ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.