சித்தி வீட்டு விழாவிற்கு சென்ற இளைஞர்... அரங்கேறிய அசம்பாவிதத்தால் பரிதாபமாக பலியான சோகம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் ஊரில் குளிக்கச் சென்ற அரசு அலுவலர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனார். தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூரை சேர்ந்தவர் செல்வம், இவரது மகன் ராஜன்(25). தற்போது திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தனது உறவினர் சித்தி வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு சென்று அங்கு விழாவை முடித்துவிட்டு தங்கியுள்ளார். பின்பு இன்று அதிகாலையில் அதே ஊரில் உள்ள பம்பு செட்டுக்கு சென்று குளித்துவிட்டு, அருகிலிருந்த கம்பியில் துணிகளை காயப் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஈரத்துணி என்பதால் அது அருகிலிருந்த மீட்டர் பெட்டிமீது பட்டதில் உடனே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜன் உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.