முருங்கைக்காயில் ஊறுகாய் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா?
முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.
மிக எளிதில் கிடைக்கக்கூடிய அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள காய்களில் முருங்கைக்காய்க்கு என்றுமே இடமுண்டு.
உடலுக்கு நல்ல வலுவை கொடுக்கும் முருங்கைக்காய், மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது.
இதனை வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய்- 500 கிராம்
புளி- 150 கிராம்
எண்ணெய்- 200 மிலி
மிளகாய் தூள்- 100 கிராம்
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
பூண்டு விழுது- 40 கிராம்
வெந்தயப்பொடி- அரை டீஸ்பூன்
செய்முறை
125 கிராம் புளியை கெட்டியாக கரைத்து விழுதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் 200 மிலி எண்ணெய் விட்டு சூடாக்கி, ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கிய 500 கிராம் முருங்கைகாயை 5லிருந்து 7 நிமிடங்கள் வரை வறுக்கவும், முருங்கைக்காய் நிறம் மாறியதும் எடுத்து விடலாம்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வறுத்த முருங்கைக்காய், புளி விழுது, 100 கிராம் மிளகாய்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 40 கிராம் பூண்டு விழுது, அரை டீஸ்பூன் வெந்தயப்பொடி, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
முருங்கைகாயை வறுத்த அதே எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து முருங்கைகாய் கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சுத்தமான, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும், இதனை 3- 4நாட்கள் ஊறவிட்டு பயன்படுத்தலாம்.