ஆட்டு ஈரலை இப்படி செஞ்சு சாப்பிடுங்க... வாழ்க்கைல இதன் சுவை மறக்காது!!!
ஈரல் என்றால் அசைவ பிரியர்களில் யாருக்கு தான் பிடிக்காது. அதனுடைய மென்மைக்கும், ருசிக்கும் அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
சிலர் ஈரலை சுட்டு சாப்பிடுவார்கள், சிலர் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், எதுவாக இருந்தாலும் என்ன ஈரல் தனி ருசிதான்.
ஆட்டு ஈரலில் நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களும் மற்றும் அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்திருக்கிறது.
குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே அசைவம் என்றால் அது ஆட்டு ஈரல் மட்டும்தான்.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவது நல்லது.
இதை வைத்து சுவையான மிளகு வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி (தேவைக்கு)
ப. மிளகாய் - ஒன்று
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
பட்டை - ஒரு சிறிய துண்டு
செய்முறை
ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான அளவில் நறுக்கி எடுத்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப. மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் ஈரல் மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் வேகவிடவும்.
நன்கு வெந்ததும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மிளகு வறுவல் தயார்.
