ரத்த சிவப்பணுக்கள் குறைபாடு! Folvite மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வைட்டமின்களின் ஒரு பகுதியான போலிக் அமிலம் ரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு மிக இன்றியமையாத ஒன்று.
வைட்டமின் 12 மற்றும் போலிக் அமிலம் இணைந்தே ரத்த சிவப்பணுக்களை உருவாக்குகின்றன.
இது குறைந்தால் ரத்தச்சோகை ஏற்படும், நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் போலிக் அமிலம் அவசியமான ஒன்றே.
இதன் குறைபாட்டை சரிசெய்யவே Folvite மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் நம் உடல் முழுதும் ஆக்சிஜனை கொண்டு செல்வது பாதிக்கப்படும், இதனால் பல சிக்கல்கள் எழலாம்.
இதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தே Folvite. உணவு அல்லது உணவு இல்லாமல் மாத்திரைகளை உட்கொள்ளலாம், மாத்திரைகளை முழுவதுமாக எடுத்துக் கொள்ளவும், உடைத்தோ, மென்றோ சாப்பிட வேண்டாம்.
உங்களது உடல்நிலையை பொறுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளை சரியான நேரத்தில் சரியான காலஅளவுகளில் எடுத்துக் கொள்ளவும்.
Folvite மாத்திரைகள் மட்டுமின்றி சரிவிகித உணவுகளை உட்கொள்வதும் அவசியம், உணவுகளில் இருந்து பெறப்படும் போலிக் அமிலத்தை போலேட் என்றழைக்கிறோம்.
பெரும்பாலும் Folvite மாத்திரைகளால் பக்கவிளைவுகள் குறைவு என்றாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக சாப்பிட வேண்டாம்.
ஒரு சிலருக்கு அடிவயிற்றில் அசௌகரியம், குமட்டல், உடல் எடை குறைவு போன்ற பக்கவிளைவுகள் இருக்கலாம்.
மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முன்னர், எடுத்துக் கொண்ட பின்னர் ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை பரிசோதித்துக் கொள்ளலாம், அப்போது தான் நீங்கள் எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் விளைவுகளை சரியாக கணிக்க முடியும்.
உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வாதநோய் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
வேறு ஏதேனும் நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டு இருந்தாலும் அது குறித்தும் மருத்துவரிடம் தெரிவிக்கவும், சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் ஆல்கஹால் அருந்துவதை குறைத்துக் கொள்வது நல்லது.
எதற்காக?
போலிக் அமிலம் குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவை சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது.
பயன்கள்
ரத்த சிவப்பணுக்கள் சீரான விகிதத்தில் இருந்தால் மட்டுமே உடல் பாகங்களுக்கு ஆக்சிஜன் எடுத்து செல்வது முறையாக நடக்கும், நீங்கள் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து போலிக் அமிலம் குறைவாக கிடைத்தாலோ அல்லது உணவுகளின் சத்துக்களை கிரகித்துக் கொள்வது குறைந்தாலோ அனீமியா ஏற்படலாம்.
இதற்கு மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையே Folvite, போலேட் அளவை சீராக்குகிறது.
முழுமையான பலன்களை பெற மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுகளில் எடுத்துக் கொள்ளவும்.
பக்கவிளைவுகள்
- வாய்வு தொல்லை
- அடிவயிற்றில் அசௌகரியம்
- குமட்டல்
- உடல் எடை குறைவு
இது பொதுவான பக்கவிளைவுகளே, இதை தவிர வேற விளைவுகள் இருந்தாலும் அல்லது மேற்குறிப்பிட்ட பக்கவிளைவுகள் தொடர்ச்சியாக இருந்தாலும் மருத்துவரை நாடுவது சிறந்தது.
கவனத்திற்கு
கர்ப்பிணிகள் போலிக் அமில மாத்திரைகள் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் நிச்சயம் பரிந்துரைப்பார்கள், காரணம் கருவி்ல் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர இது அவசியம்.
தாய்ப்பாலூட்டும் பெண்களும் போலிக் அமில மாத்திரைகள் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதே,
இது குழந்தைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்துவதில்லை.
சிறுநீரக மற்றும் கல்லீரல் நோயாளிகள் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பதே சிறந்தது.