மீன் வாங்கியவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மீன் கொள்வனவு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட மீனில் மிக அதிக அளவிலான ஃபார்மலின்(formalin) எனப்படும் எனும் ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாட்ஸ்அப் குழுக்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் நீனா மாம்பிளை என்பவர் இந்த விடயத்தை கண்டறிந்துள்ளார்.
மீனின் நிறம் ஊதாவாக மாற்றமடைந்து இருப்பதனை கண்டறிந்துள்ளார். இந்த விடயம் குறித்த whatsapp பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மீன்களை நீண்ட காலம் பழுதடையாமல் வைத்திருப்பதற்காக இந்த ஃபார்மலின் எனப்படும் நச்சு பதார்த்தம் மித மிஞ்சிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டில் சமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மீன் வகை ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
ஃபார்மலின் போன்ற நச்சுப் பொருட்களை மீன்களை நீண்ட காலம் வைத்திருப்பதற்காக பயன்படுத்தும் மோசடியை கண்டறிவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் நூதன முறைகளில் மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வழமையாக மீன் கொள்வனவு செய்யும் நபர் ஒருவரிடம் மீன் கொள்வனவு செய்தாகவும் அதன் தரம் குறித்து தமக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அதனை ஆய்வு கூட பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் டாக்டர் நீனா தெரிவிக்கின்றார்.
அதன்போது இந்த மீனில் மிதமிஞ்சிய அளவில் ஃபார்மலின் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது என குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி அடைந்த தாம் குறித்த தகவலை whatsapp மூலம் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கின்றார்.
இவ்வாறு மனித உடலுக்கு மிகவும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்களை உணவு வகைகளில் கலப்பதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சாதாரண பொதுமக்களின் உயிர்களுடன் இந்த மோசடிக்காரர்கள் விளையாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2011ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஒழுங்கு சட்டத்தின் கீழ் ஃபார்மலினைக் கொண்டு உணவு வகைகளை பதப்படுத்த அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.