தந்தையிடம் 10 கோடி கேட்டு மிரட்டிய 11 வயது சிறுவன்... நம்பமுடியாத உண்மை சம்பவம்
காசியாபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சிறுவன் யூடியூப் மூலம் ஹேக்கிங் தந்திரங்களைக் கற்றுக்கொண்டு தனது சொந்த தந்தையின் அக்கௌன்ட்டை ஹேக் செய்து, மிரட்டி பணம் பறிக்க முயன்றதோடு இல்லாமல், அவரை பிளாக்மெயிலும் செய்துள்ளான். இந்த சிக்கலான நிலைமையைச் சரி செய்ய 10 கோடி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான்.
சிறுவன் கேட்ட 10 கோடி பணம் வழங்கப்படாவிட்டால், தந்தை அக்கௌன்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட 'பிரைவேட்' புகைப்படங்கள் மற்றும் குடும்ப ரகசியங்களை இணையம் முழுவதும் வெளியிட்டுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளான். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த காரணத்தால் தந்தைக்கு அது அவரின் மகன் தான் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.
எதோ மர்மநபர் தான் தனது அக்கௌன்ட்டை ஹேக் செய்து மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக நினைத்து தந்தை யாருக்கும் தெரியாமல், சத்தமில்லாமல் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசும் மிரட்டல் தொகையை கேட்டு அரண்டு போய்விட்டதாம். எது? 10 கோடி கேட்டு மிரட்டலா என்று அதிர்ந்துபோன காவல்துறை, உடனடியாக வழக்கை விசாரிக்க முடிவு செய்தது.
பாதிக்கப்பட்டவர் தனது மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், கணக்கிலிருந்து அவரது தனிப்பட்ட படங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும், படங்களை அணுகிய பிறகு அவரின் அக்கௌன்ட் பாஸ்வோர்டு மற்றும் கணக்குடன் இணைப்பிலிருந்த தொலைப்பேசி எண்ணையும் ஹேக்கர்கள் மாற்றிவிட்டனர் என்று புலம்பியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, அவரது மின்னஞ்சல் கணக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) ஹேக் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டல் வந்துள்ளது என்று போலீசில் தெரிவித்துள்ளார். போலீசார் இந்த வழக்கைக் கவனமாக விசாரிக்கத் தொடங்கிய போது ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை போலீசார் கவனித்துக் குழம்பியுள்ளார்.
ஹேக்கர்களின் ஐபி முகவரியும், பாதிக்கப்பட்டவரின் ஐபி முகவரியும் வீட்டிற்கு ஒத்ததாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த மிரட்டல் வேலையை அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தான் செய்து வருகின்றனர் என்று போலீஸ் கணித்துள்ளது. அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஒரே வீட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்று போலீஸ் தெளிவானது.
போலீசார் குடும்பத்தினரை அழைத்து விசாரணையைத் தொடங்கியபோது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் காவல்துறையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டான். காசியாபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சைபர் கிரைமில் சிக்குவதைத் தவிர்ப்பது எப்படி என்ற ஆன்லைன் அமர்வில் சிறுவன் கலந்து கொண்டுள்ளான் என்றும் கூறப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் கலையில் தேர்ச்சி பெற அவர் யூடியூபில் ஹேக்கிங் தந்திரங்கள் கொண்ட ஆன்லைன் வீடியோக்களை தவறாமல் பார்த்து வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.