தங்க புதையலுக்கு 50 அடி குழி தோண்டிய குடும்பம்... இறுதியில் அரங்கேறிய பாரிய துயரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தங்க புதையல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 50 அடி ஆழ குழிதோண்டிய நிலையில் இருவர் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள திருவள்ளூர் காலனியைச் சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக 50அடிக்கு மேலாக குழிதோண்டி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக, குழியில் தண்ணீர் தேங்கியதால், குழி தோண்டும் பணியினை நிறுத்திவிட்டு, தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி மீண்டும் குழிதோண்டும் செயலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, திடீரென மூச்சுத்திணறி, குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரகுபதி, நிர்மல் கணபதி மற்றும் முத்தையாவின் இரு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் மயங்கி விழந்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரகுபதியும், நிர்மல் கணபதியும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், முத்தையாவின் இரண்டு மகன்கள் மேல் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிசாரின் விசாரணையில், வீட்டில் தங்கப் புதையல் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த மாந்திரீகர் கூறியதால் இவ்வாறு கடந்த ஆறு மாதங்களாக குழி தோண்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.