மாலை நேரத்தில் மொறு மொறுப்பான பச்சை பட்டாணி வடை!
மாலை நேரத்தில் சுடச்சுடத்தேநீருடன் வடை சாப்பிடுவது எவ்வளவு நன்றாக இருக்கும்.
அதிலும் வீட்டில் வடை செய்து சாப்பிடுவது இன்னும் சுவையாக இருக்கும். அதில் பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பர்.
இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த பட்டாணி - 1 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் காய்ந்த பட்டாணியை சுடுநீரில் போட்டு மூடி வைத்து குறைந்தது 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் அந்த பட்டாணியை அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த பொடியை அரைத்து வைத்துள்ள பட்டாணியுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் சிறிது சிறிதாக எடுத்து, தட்டையாக தட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பட்டாணி வடை தயார்.